28 May 2012

டேம் 999 : சில வார்த்தைகள் : 1
Kicking Sun என்றாள் சனிதா  வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய். ஹாஸ்டலில் இருந்திருந்தால் இந்நேரம் என்ன சொல்லியிருப்பாள் என ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து நல்ல பிள்ளையாய் சிரிப்பை அடக்கிக் கொண்டேன். திருவனந்தபுரத்திலிருந்து வந்தவள் திடீரென தனது திருமண அழைப்பிதழை நீட்டிய போது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ஏன் அதுக்குள்ள என்று என்னை அறியாமலேயே கேட்டு விட்டு பின்னர் நாக்கை கடித்துக் கொண்டேன். கண்களை விரித்து உதட்டை அழுந்தி பரிதாபமாக சிரிக்க முயன்று தோல்வியடைந்தேன். பல்கலை முதலாம் ஆண்டில் my fav personality என்ற தலைப்பில் இந்திரா நூயியைப் பற்றி அவள் அரை மணி நேரம் உணர்ச்சிவசப்பட்டு பேசியது நினைவுக்கு வந்தது. திருமண அழைப்பிதழில் மணமக்களின் படிப்பை போடாதிருந்தால் மணமகளை விட மணமகன் குறைவாக படித்திருக்கிறார் என்று அர்த்தம். அவளது முகத்தை பார்க்காமலேயே அழைப்பிதழைப் புரட்டியபடி என்ன செய்றாங்க வுட்பி  என்று கேட்டேன். ப்ளஸ் டூ பெயிலாம்,ஆனா ரியல் எஸ்டேட்டுல பணம் கொட்டுதாம்,நல்ல குடும்பமாம்,ஜாதகமும் ஒத்துப் போச்சாம்.. பேரண்ட்ஸ் சொல்றாங்க.. என்ன பண்ண சொல்ற.. என்று முழுங்கினாள் சனிதா. வாழ்க்கை நாம நினைக்கிறபடியெல்லாம் அமையறதில்ல கோபி.. அமையுற வாழ்கைய சந்தோஷமா ஏத்துக்கணும்னு தத்துவம் வேற. அவர் அஞ்சு மொழில சரளமா பேசுவார் தெரியுமா என்று உற்சாகமாக சொன்னாள். நிஜம்மாவாடி என்று நானும் உற்ச்சாகத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன். உள்ளூர இருவருக்குமே எரிந்து தான் கொண்டிருந்தது. சிப்ஸும் போளியும் சிவப்பு பழமும் வாங்கி வந்திருந்தாள். கூடவே நான் கேட்டுக் கொண்டபடி Dam 999 திரைப்பட சிடியும். உருமியை மறந்து விட்டாளாம். வேணும்னே மறந்திருப்பாள் என்றது மனது. ‘எங்களுக்கெல்லாம் உங்க ஊர் சூர்யாவை தான் பிடிக்குது உனக்கு எங்க ஊரு ப்ரித்விராஐை..’ என்று ஒரு முறை அவள் சொன்னதும், பொட்டிரெட்டிப்பட்டி ECE ப்ரித்விராஜுடன் என்னை இணைத்து தோழிகள் கடைசி வரை ஒட்டிக் கொண்டிருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது.

சற்று முன் தான் டேம் 999 பார்த்து முடித்தேன்.சினிமா குறித்த வாசிப்போ பார்வையோ எனக்கேதும் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். சந்திக்க நேரிடும் குரல்களில் ஒன்று என்ற அளவிலேயே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். டேம் 999 தலையில் தூக்கி  வைத்து கொண்டாடக் கூடிய அளவிற்கு இல்லையென்றாலும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று தான்.எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் பெரிதாக கவர வில்லை என்றாலும் ஒட்டுமொத்த அளவில் படம் சிறப்பாகத் தான்  இருந்தது- செஞ்சூரிகள் ஏதும் இல்லாது இருபது முப்பது என ஒவ்வொருவரும் எடுத்து வெற்றியும் பெரும் நியுசிலாந்து அணி போல. கதை ஏற்கனவே நீங்கள் அறிந்த ஒன்று தான். முல்லைப் பெரியாறு தவிர்த்து இன்னொரு விஷயமும் பார்ட் டைம் பகுத்தறிவாளர்களுக்கு பிடிக்காது போகலாம்.ஜோதிடத்திற்கு படம் அளிக்கும் முக்கியத்துவம். தற்செயல் நிகழ்வென்று சொல்ல முடியாதபடி முன்கூட்டியே அனைத்தையும் கணித்துக் கொண்டிருக்கிறது படத்தின் ஒரு கதாபாத்திரம்.திலகன் அதை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  

இயக்குனர் நினைத்திருந்தால் மிக எளிதாக சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.பழைய அணையை உடையாதிருக்கச் செய்து விட்டு,துரை  கட்டும் புதிய அணையாலேயே அழிவு நிகழ்வதாக காட்டி,காதலர்களை இறுதிக் காட்சியில் காட்டுவது போன்றே உயிரோடு விட்டு விட்டாலே போதுமானது.அவர்கள் மீண்டும் சந்திக்கவும்,(சந்திப்பின் விளைவாக) பழைய அணை உடைவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாகவும் பார்வையாளன் ஒரு புதிய கதையை தனக்குள் நிகழ்த்திக் கொள்வான்.இயக்குனர் இதனை யோசிக்க வில்லையா இல்லை பழைய அணை உடைவது போல காட்டியே ஆக வேண்டும் என்பது தயாரிப்புக்கு உதவியவர்களின் நிலைப்பாடா என்பது தெரியவில்லை.யோசித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

மீராவாக வரும் விமலா ராமன் அடிபொலிகிறாள்.படத்தில் முழுமையான நடிப்பை வழங்கியது அவள் ஒருத்தியே.சகல உணர்வுகளையும் அருமையாக வெளிப்படுத்துகிறாள்.கோவிலில் வினய்யின் அருகில் நின்று கொண்டு சாமி கும்பிடும் காட்சி ஒன்றே போதும்;வினய்யின் மீது கொண்டிருக்கும் உடல் ஈர்ப்பை  நொடிப் பொழுதில் அவள் கண் செல்லும் திசையால் அதனைத் தொடரும் சிறு  சலன அசைவால்.. வெகு அருமை.மீரா தனது தோழி ரஸியாவிடம் சட்டையை எடுத்துக் காட்டி முகரும் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர். சர்வேதேச படத்தில் மசாலாக்களை தவிர்த்திருக்கலாம். இன்னொரு விசயமும் மீராவின் பாத்திரப் படைப்பில் உறுத்துகிறது.வினய் திருமணமாகி மனைவி குழந்தைகளோடு இருக்க மீராவை மட்டும் கன்னியாகவே இருக்குமாறு நிகழ்வுகளை அமைக்க இயக்குனருக்கு என்ன நிர்பந்தம்? ஆண் எவளோடு வேண்டுமானாலும் படுப்பான்,மணம் செய்வான்,குழந்தைகள் பெற்றுக் கொள்வான்,பெண் அவனையே நினைத்துக் கொண்டு அருள் நிறைந்த  மரியாயே ஜெபம் சொல்லிக் கொண்டு கற்புக்கரசி கண்ணகியாக காத்திருக்க வேண்டும்,பிறகு அவனுக்கு குற்றம் நடந்தது என்ன என்று புரிந்தவுடன் மீண்டும் காதல் பூக்க வேண்டும்.போங்கப்பா... நீங்களும் உங்கள் பெண்ணுடல் மீதான பொசஸிவ்னெஸ்ஸும்.மீராவுக்கும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட வெளிநாட்டுக் காரனுக்கும் ஒரு கசமுசா நடந்தது போல காட்டினால் குறைந்தா போய் விடுவீர்கள்?

சங்கரனாக ராஜித் கபூர்,வினய்யாக வினி ராய்,கேப்டன் பிரெட்ரிக் ப்ரவுனாக ஜோஷுவா,ராசியாவாக மேகா பர்மன்,மரியாவாக சாலா உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை தங்களளவில் அளித்திருக்கிறார்கள்.வில்லன் பல தமிழ் படங்களில் பார்த்த முகம் தான்.ஆசிஸ் வித்யார்த்தி வலிமை சேர்க்கிறார்.சாண்ட்ராவாக வரும் லிண்டா ஒரு செய்தி தொகுப்பாளினிக்கு உரிய பக்குவத்தை வெளிப்படுத்த தவறி விடுகிறார் எனத் தோன்றுகிறது.லிண்டாவை என்டிடிவி பர்கா தத்தின் நிகழ்ச்சிகளை கொஞ்சம் பார்க்கச் செய்திருக்கலாம்.ஆனால் முதன் முதலாக அணை உடையும் அபாயம் தெரியும் போது அவள் திடுக்கிடுவது மிகுந்த நேர்த்தியாக இருக்கின்றது.

படம் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்பதே தெரியாத வண்ணம் ஒரு எடிட்டிங். சுரேஷ் பாய் பாராட்டுக்குரியவர்.ஒலிப்பதிவு யாரெனத் தெரியவில்லை.திருட்டு சிடியில் பார்க்கும் போதே பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.முஜே சோடுகே பாடலில் கன்னத்தில் அறையும் ஒலி அத்துனை செல்லமாகவும் பிரியமாகவும் ஒலிக்கிறது. தியேட்டரில் பார்த்தால் மிரட்டுவார் எனத் தோன்றுகிறது.ஒளிப்பதிவு அடடே எனச் சொல்லும் படியாக ஒரு காட்சியிலும் இல்லாதிருப்பதை குறையாக கருதுபவர்கள் குறையாகவும்  நிறையாக கருதுபவர்கள் நிறையாகவும் கொள்ள முடியும்.

தோட்டா தரணி குறித்து ஊடகங்களில் சகட்டு மேனிக்கு பாராட்டித் தள்ளியிருந்தார்கள்.புதிய அணை கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும் தருணத்தில் காட்டப்படும் காட்சிகளின் அரங்க அமைவுகள் பழங்கால ப்ளாக் அண்ட் வொயிட் திரைப்பட காட்சிகளை நினைவு கூற உதவுகிறது.அணை உடையப் போகிறதென அறிந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது போன்று அமையும் காட்சிகளில் போடப்பட்டிருக்கும் செட்டிங்க்ஸ்கள் குப்பையிலும் குப்பை.நமது பவர் ஸ்டாரின் படங்களில் கூட அதை விட நூறு மடங்கு சிறப்பான அரங்க அமைவுகளை நிச்சயம் காணலாம்.சர்வதேச தரம் வேண்டாம், இந்தியத் தரமாவது வருமாறு பார்த்திருக்கலாம்.பேரழிவுக் காட்சிகளில் மனிதர்களை அவர்கள் தம் வீதிகள் வீடுகளோடு காட்டும் காட்சிகள் மிகுந்த அந்நியமாக பார்வையாளரை உணர வைக்கின்றன. மற்றபடி தோட்டா தரணியை பாராட்டுவதற்கு படம் நெடுக காட்சிகள் விரவிக் கிடக்கின்றன.

இசையமைப்பாளர் ஒசுப்பச்சன் என டைட்டில் கார்ட் சொல்கிறது.தமிழ் சினிமாக்களில் அவர் ஏதும் இசையமைத்ததில்லை என்பதனால் நீங்களும் அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.எந்தவொரு இந்திய பின்னணி இசையும் மேற்கத்திய காதுகளுக்கு ஆச்சர்யத்தையே அளிக்கும்.ஆகவே இசைக் கோர்ப்புக்கென ஆஸ்காரில் அவர் வரிசைப்படுத்தப் பட்டமை புரிந்து கொள்ளக் கூடியதே. இந்திய மனங்கள் படத்தின் பின்னணி இசை குறித்து பெரிதாக சிலாகிக்காது என்பது எனது எண்ணம். ஹாலிவுட் படங்களுக்கு இளையராஜா பங்களித்தால் ஒவ்வொரு வருடமும் கேன்ஸிற்கு போகும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இசைய ராஜா லாஸ் ஏஞ்சல்ஸ் போக வேண்டியிருக்கும். தீம் சாங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அருமையான ஒன்று. என்ன செய்வது,நான் தான் கமிட்டியில் இல்லையே? மொத்தத்தில் எந்தவொரு இசையமைப்பாளரும் இந்தப் படத்திற்கு இதை விட அதிகமாக  பங்களித்திருக்க இயலாது.

இயக்குனர் சோஹன் ராய். பல இடங்களில் தனது முத்திரையை பதிக்கிறார்.நில நடுக்கம் உணரும் பசுக்களின் முகத்தில் தெரியும் மிரட்சி,அணை எதிர்ப்பாளருக்கு துரை சாராயம் ஊற்றிக் கொடுக்க எதிர்ப்பாளர் தன்னை இழுத்து வந்தவர்களை நோக்கி பெருமிதத்துடன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து குடிக்கும் காட்சி,சிறு மழையில் நனைந்த சான்ட்ராவிற்கு ஜலதோஷம் பிடித்துவிடக் கூடாதென சாரங்கன் அவளது உச்சந்தலையில் வைக்கப் போக சான்ட்ராவோ கையை நீட்டும் காட்சி,துரையின் கட்சிக்கு கிழக்கிந்திய ஜனநாயக கட்சி என பெயரிட்டிருப்பது என்று பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.சான்ட்ரா முதலில் தனியாகவும் பின்னர் குழுவுடனும் மரியாவை மீட்கப் போகும் காட்சிகள் கார்ட்டூன் பார்க்கும் உணர்வையே தருகின்றன.இரு ஆண்கள் அருகில் இருந்தும் மீட்கும் முயற்சியை ஒரு பெண்ணே முன்னின்று எடுப்பது மகிழ்வாகத் தானிருக்கிறது.”ஒரு கடலாடியை மிரட்டுவதற்கு இது போதுமானதில்லை” என வருகிறது ஒரு வசனம்.தென்தமிழக நிகழ்வுகள் மனதில் சட்டென வந்து போயின.எத்தனை சத்தியமான வார்த்தைகள்.இயேசு பிரான் காரணமில்லாமலா  பன்னிருவரையும் அவர்களிலிருந்து தேர்ந்தெடுத்தான்.அச்சனுடன் ஆற்றைக் கடக்காத மீரா எப்படி தப்பித்தாள் என்பதை திரையில் காட்டாது ஊகத்திற்கு விட்டிருப்பது பாராட்டுக்குரியது.எப்படி அவள் தப்பிக்க இயலும் என்ற கேள்வி இங்கு அர்த்தமற்றது.தப்பிக்க விதிக்கப்பட்டிருப்பதால் தப்பித்தாள் என நான் சொன்னால் என் மீது ஆரியமுத்திரைகள் விழும் அபாயமிருக்கிறது.மீராவிடமிருந்து சிறுவன் சாம் விடைபெற்றுக் கொள்ளும் போது அவளுக்கு கொடுக்கும் பரிசுப் பொருளில் ஒரு உண்மை இருக்கிறது;அந்த பரிசுப் பொருள் இறுதியில் என்னவாகிறது எனக் காட்டும் காட்சியில் ஒரு தரிசனமிருக்கிறது.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் முடிந்த பின்னர் ஒரு வரி போடுவார்கள்.ஏறக்குறைய அதே அர்த்தத்தில் இவர்களும் ஒரு நான்கு வரி சொல்கிறார்கள்.பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே யமுனாவும் இதையே பாபுவிடம் சொல்லி சென்று விட்டாள்.மகாவாக்கியங்களை புரிய வைக்க படைப்பாளிகள் யுகம் யுகமாய் தொடர்ந்து மெனக்கெட்டு கொண்டே வருகிறார்கள்.பரிதாபமாயிருக்கிறது.  

வொர்த் வாட்சிங்!!

(தொடரும்..)

19 May 2012

முருகபூபதியின் சூர்ப்பணங்கு நாடகம்..
நான் சென்னை சென்று கொண்டிருக்கும் போது திருச்சியில் மதியம் சந்தித்த நண்பர் இழுத்துப் பிடித்து என்னை தஞ்சைக்கு அழைத்துப் போனார்; முருகபூபதியின் சூர்ப்பணங்குநாடகத்திற்கு. இத்தன வருஷம் பழகியிருக்கான் மொத மொறயா ஒரு இடத்துக்கு கூப்பிடுறான்ங்ற ஒன்றிற்காகவே, அவனது நட்பின் பொருட்டு மட்டுமே, வேண்டா வெறுப்பாய் போய்த் தொலைந்தேன்.பின்னர் நிஜமாகவே தொலைந்தேன்.பூபதியின் இசை தான் ஹைலைட். ஒருகட்டத்தில் நான் ஒரு யட்சியைப் போல மரத்தில் சாய்ந்து கொண்டு உடலைப் பற்றிய தன்னுணர்வின்றி ரசித்துக் கொண்டிருந்ததாக நண்பன் கூறினான். பூபதியின் குரலை என்னால் இன்னமும் காதுகளில் கேட்க முடிகிறது. நிராதரவற்றுப் போய் கைவிடப்பட்ட அபலைப் பெண்களின் குரல் அது. அமைதிக்கும் வன்முறைக்குமிடையேயான பொதுப் புள்ளியில் கனன்று உக்கிரத்தை அல்லது உத்திரத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் தீயின் வலி அது. நண்பர் நாடகம் முடிந்த பின்னர் சிறிது நேரம் பூபதியிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது நினைக்கும் போது சில வார்த்தைகள் நானும் பேசியிருக்கலாம் என தோன்றுகிறது. மறக்க இயலா நினைவாயிருந்திருக்கும்.

நான் வாசிக்க முயன்று தோல்வியடைந்த கோணங்கியும் அங்கு வந்திருந்தார்.அவர் என்னை கடந்து செல்லும் போது எழுந்து வணக்கம் சொன்னேன்.அவரும் பதில் வணக்கம் சொன்னார்.எப்படியிருக்கீங்க என்று தெரிந்தவரிடம் கேட்பது போன்று அவர் கேட்ட போது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.அவரை நான் பார்ப்பது அதுவே முதல் முறை.நண்பர் ஞானப்ரகாசம் ஸ்தபதி சென்னையில் நாடகம் நிகழவிருக்கும் தகவலை பகிர்ந்து கொண்ட போது மிகவும் மகிழ்வடைந்தேன். முன்னர் சென்னையில் உடன் வேலை பார்த்த தோழிக்கு கல்யாணம் என அம்மாவிடம் சொல்லிவிட்டு நிச்சயம் சென்னை வந்து விடலாம் என்பது எண்ணமாயிருந்தது. ஒவ்வொரு முறையும் பொய்களை ஒத்திகைகள் பல பார்த்த பின்னரே அம்மாவிடம் சொல்லத் துணிவேன்.ஆனால் ஏனோ அவளைப் பார்த்த உடனேயே உண்மை தானாகவே வெளியே வந்து விடும்.இப்படி சொல்லணும்னு நினைச்சேன்மா என்பதையும் அப்போது சேர்த்து சொல்வதே எனது வழக்கம்.போறதுன்னா போ.. ஆனா அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்றாள் அம்மா. சரி என்றேன். இன்னொரு கண்டிஷன்.புதன் கிழமை உனக்கு நிச்சயதார்த்தம். ஒன்றும் பேசாது சென்று விட்டேன். கிணற்றடிக்கு தம் மக்களை அவசர அவசரமாக இழுத்துச் செல்லும் நவீன தங்காள்கள் நமது அம்மாக்கள் எனத் தோன்றியது. போற தான என்று அம்மா பின்னர் கேட்ட போது சென்னையில் இந்த வாரம் முழுதும் மழ பெய்யுமாம் நாடகம் கேன்சல்என்றேன். எப்போ தள்ளி வச்சுருக்காங்களாம் என்றாள். சிரபுஞ்சி மாதிரி இனி ஒவ்வொரு நாளுமே சென்னையில மழ பெய்யுமாம் அதனால இனி நாடகமே அங்க கிடையாதாம்  ‘வேறேதாவது ஊர்ல வைக்கலாம்லா பூபதி ஆக்சிடன்ட்டுல செத்துட்டாராம் அதானால அந்த ட்ரூப்பையே கலச்சுட்டாங்களாம்  ‘உன் வயசு பேச சொல்லுது சம்பாதிக்க வேற செய்யுறஎன்றபடி நகர்ந்தாள் நல்லதங்காள். தனியே வாழ வழியேது.. தனித்தன்மைக்கு விடை கொடுக்க என் வழி பற்றி வாயம்மாஎன்றே கிணற்றடிக்கு அழைக்கின்றனர் ஒவ்வொரு வீடுகளிலும். வாழ்வின் ருசிக்கு ஏங்கும் எங்கள் நாவுகள் குறித்து யார்க்கும் கவனமில்லை.சென்னையில் இருந்த போது எஸ்வி சேகரின் நாடகம் ஒன்றிற்கு சென்றிருக்கிறேன். கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் மொக்கை கொஞ்சம் காபி என நன்றாகவே இருந்த அது அடுத்தடுத்த நாட்களிலேயே நினைவின் சிடுக்குகளில் தொலைந்து போயிற்று. ஆனால் பேரணங்கு பார்த்து நிச்சயம் இரண்டு மாதங்களாவது கடந்திருக்கும்.இன்னமும் அது குறித்து நினைக்கும் போது உருவாகும் வெம்மையும் ஆற்றாமையும் வரும் பெருமூச்சும் ஆங்காரமும் நாடகத்தின் வன்மையை எனக்கு உணர்த்துவதாய் உள்ளது.அப்போது நான் எனது வலைப்பூ  முயற்சியையே ஆரம்பித்திருக்க வில்லை. பார்த்த கையோடு பகிர்ந்திருப்பின் நிறைவாய் முழுமையாய் இருந்திருக்கும்.


நாடகம் பேசுவது நல்லதங்காளின் கதையை. நாமறிந்த நல்லதங்காள் ஒருவர் தான். ஆனால் தங்காள்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர்; அவள் தம் ஏழு குழந்தைகளும் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர் என்பதை ஈழம் தவிர்த்த பற்பல வலிமிகு சமகால வரலாற்றையும் முன்வைத்து மனம் கணக்க உங்கள் மன சாட்சியோடு உரையாடியபடியே சொல்லிச் செல்கின்றது. தனது வலி குழந்தைகளுக்கு வேண்டாம் என்ற பெருங் கருணையோடு, குழந்தைகள் அனைவருடன் தற்கொலை செய்து கொள்ள விரும்பும் அன்னைக்கும், வாழ்வின் மீது தீரா காதல் கொண்டிருக்கும்/அவ நம்பிக்கையூடே சிறு பொறி நம்பிக்கையையும் கொண்டிருக்கும் மகள்களுடனுமான போராட்டம் எதன் காரணிகளால் முடிவற்று நீடிக்கின்றது என்பதை சமரசமின்றி செவுட்டில் அறைந்தார் போல சொல்கிறது நாடகம்.சுரைகளை பிரசவிக்கும் படிமத்தில் இயக்குனர் சொல்ல வருவது எமக்கு உவப்பானதாக  இல்லை.பிரசவிப்பதையே நிறுத்தினாலும் கூடும், எங்கள் கருவறை நிச்சயம் சுரைகளை ஜனனிக்காது. சுரைகளுக்குப் பதிலாக தனிப்பட்ட கொலைகளை புறக்கணிப்புகளை பழிவாங்கல்களை பாசாங்குகளை துரோகங்களை அவ்வப்போது எம்மை சுற்றியுள்ளோருக்கு கருணையின்றி சாத்தியப்படும் பொழுதெல்லாம் வாரி வழங்கியபடியே இருக்கின்றோம் தான் நாங்கள்!! சுரை படிமம், புனித நூல்கள் கூறும் நரக கோட்பாட்டினைப் போன்றே பயங்காட்டி, தனது பார்வையாளனை நல்வழிபடுத்த இறைத்தூதர் முருகபூபதி பயன்படுத்துவதாகவும் நாம்  கருதிக் கொள்ளலாம். முருக பூபதிக்கு நெருங்கிய நண்பர்கள் யாரேனும் இந்த பதிவை காண நேர்ந்தால் பூபதியிடம் இரு விசயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் என தெரிவியுங்கள். 1.நாடகம் முடிவுற்ற பிறகு நிகழும் உரைகளை தவிர்ப்பது நல்லது. அது பொங்கும் மனதை கனிய வைத்து ஆசுவாசப் படுத்தி விடுகிறது.மேலும் காண்பவர் நாடகம் குறித்து பலப் பல எண்ண ஓட்டங்களோடு இருக்கும் பொழுது அளிக்கப்படும் கோனார் உரைகள் தனியரின் சிந்தனை ஓட்டத்திற்கு தடையாகவும் அமைந்து விடுகிறது 2.நாடகம் நிறைவுற்ற பிறகு நடிகர்களை அவர்களது ஒப்பனைகளை களைந்து பார்வையாளர்களுடன் உரையாட அனுமதிக்கக் கூடாது.அது பார்வையாளரின் போதையை தெளிய வைத்து விடும் வல்லமை கொண்டது. இவ்விரண்டையும் தவிர்க்க வேண்டுமெனின் விமர்சன நிகழ்வொன்றை தனியாக மறுநாளில் ஏற்ப்பாடு செய்தால் மட்டுமே சாத்தியப் படும்.தமிழ்ச் சூழலில் கனவுகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.ஆகவே நண்பர்களே! எனது அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்: நாடகத்திற்கு நீங்கள் செல்வீர்களானால் நாடகம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வினாடியே விறுவிறுவென இடத்தை காலி செய்து வந்து விடுங்கள்.யாரிடமும் பேசவோ,யார் பேச்சைக் கேட்கவோ வேண்டாம். நிரம்பித் தழும்பும் கோப்பையிலிருந்து வீழும் சொட்டுக்களின் ஓசை பெரும் தியான அனுபவம்! 


அரங்கின் ஒளியமைவும் நடிகர்களின் நிகரற்ற வெளிப்பாடும் உங்கள் கற்பனைக்கு எட்டாததாய் இருக்கும் என உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.


நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதிருந்தால் பாவிகள் என்றும், பிற பகுதிகளிலிருந்து இதற்கென பயணித்து வந்து காண்பீர்களாயின் பாக்கியவான்கள் என்றும் அழைக்கப்படுவீர்களாக!! 


ஆமென்.

7 May 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பும் நீர்த்துப்போன திராவிட கருத்தியலும்சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியது தான் தாமதம்.. செய்தித் தாள்களில் நாள் தோறும் புரட்சிகர அறிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. உட்பிரிவுகளை பதியாமல் நாடார்என்றே குறிப்பிட வேண்டும், பொதுவான பெயரில் பதிவு செய்யக் கூடாது தேவேந்திரர்கள் அல்லது தேவேந்திர குலம்என்று தெளிவாக பதிவு செய்ய வேண்டும், ’வன்னிய குல சத்திரியர்’, ’வேளாளர்’, ’அருந்ததியர்’, ‘யாதவா’, ... என்ன கொடும்மைங்க இது??

ஈரோட்டு சூரியன்களும் திருக்குவளை தீப்பந்தங்களும் வீர கொளத்தூர் மணிகளும் செந்தமிழர்களும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழ்த்திருநாட்டில்.. ஒரு பகுத்தறிவு பட்சியாவது சாதி இல்லைஎன்று பதிவு செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை கேட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்த்தால்.. அடடா.. ஆச்சரியக் குறி. என்னது.. அவங்களும் அவங்களோட சாதிப் பட்டத்தைத் தான் சொல்லப் போறாங்களா..? மங்களம் உண்டாகட்டும்!

ஸோ.. இவங்க எல்லோரும், இவங்க அமைப்புகளிலே இருக்கிறவங்க எல்லோரும், பிரம்மா- முகம்,தோள்,தொடை,பாதம் உண்மையை ஒத்துக் கொள்றாங்க! அதாவது, தாம் சூத்திரர்தான் என்பதை (ஈவெரா வார்த்தையில் சொன்னா நாங்கள் தேவடியா மக்கள் தான் என்பதை’ ) நூறு சதம் மனப்பூர்வமாய் வெளிப்படையாக தமது வாயினாலேயே ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்பமாய் கையெழுத்துச் சான்றும் போட்டுத் தர்றாங்க. சபாஷ்! பேஷ் பேஷ்!! என்ன்னாது.. சலுகைகளை பெறதுக்காக வேறு வழியில்லாம இப்படி சொல்ல வேண்டியிருக்குதா? வேணாங்க.. அப்புறம் ஏதாச்சும் சொல்லிடப் போறேன். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஒருபக்கம், நாங்கள் விருந்தாளிக்கு பொறந்தவர்கள் தான் என கையெழுத்திடும் வைபவங்கள் ஒருபக்கம். அபத்தத்தின் உச்சம்!

நான் வாசித்த வரையில் சிறு ஒளிக் கீற்றாய் மாற்றி ஒலித்த ஒரே குரல் இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலியுடையது. முஸ்லீம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கிரி, லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே முஸ்லீம்கள் அனைவரும் மதத்தை மட்டும் குறிப்பிடவும்”. மகிழ்ச்சி! முஸ்லீம் லீக் இயக்கக சகோதரர் சகோதரிகளுக்கு வணக்கங்கள்!

இந்த விடயத்தில் இஸ்லாமியர்களிடையேயும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பெரும் ஆதரவாளர்களை தமிழகத்தில் கொண்டிருக்கும் தவ்ஹித்அமைப்பினர் சாதி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தங்களது பிரிவை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். அல்லாவிற்கு உருவம், முஸ்லீம்களுக்கு சாதி என்ற இரு கேள்விகளுக்கும் இருக்கு ஆனா இல்லைஎன்பது இவர்களின் தரப்பு.

எவர்கள் எப்படியோ.. சாதி இல்லைஎன்றே பதிவு செய்ய நான் உத்தேசித்து இருக்கிறேன்.

15 Apr 2012

ட்ரங்குப் பெட்டியும் ஒனிடா பூதங்களும்

எனது பெரியப்பா எக்ஸ் தாசில்தார் என்பதை விடவும் நாட்டு மருத்துவராகவும் ஜோதிடராகவும் தான் அதிகம் அறியப்பட்டவர்.ஆனால் அவர் மிக செலக்டிவாக தான் தேர்ந்து எடுத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவமும் ஜாதகமும் பார்த்து வந்தார்.நீங்க தான் பார்க்கணும் அய்யா என்று பலர் எத்தனை முறை கெஞ்சினாலும் அவர்களை பக்கத்து தெரு கொல்லிமலை கைவல்யத்திடம் போகச் சொல்லி அனுப்பிவிடுவார். கைவல்யம் அங்கிள் எனது பெரியப்பாவின் கல்லூரிச் செலவிற்கு பலமுறை பணம் கொடுத்து உதவியவர் என்பது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நான் இரண்டாம் ஆண்டு என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போது பொங்கல் கொண்டாட ஐந்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.பெரியப்பா,சித்தப்பா, அத்தை அவரவர் வீட்டு வாண்டுகள் என ஒட்டுமொத்த குடும்பமே எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.எனது தலைமுறையில் நான் தான் மூத்தவள் என்பதாலும் மெட்ராஸில் படிப்பவள் என்பதாலும் குட்டீஸ்களுக்கு என் மீது அளவற்ற ப்ரியம்.கொஞ்சம் மரியாதை கலந்த பயமும் அவர்களுக்கு என் மீது உண்டு. நாங்கள் அனைவரும் போட்ட ஆட்டத்தில் வீடே அலறியது.மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை.ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்ல முன்பதிவு சீட்டுகள் இல்லாததால் சனிக்கிழமையே ரிசர்வ் செய்திருக்கிறார் அப்பா என்று தெரிய வந்த போது எனக்கு கடும் கோபம் வந்தது. அழுது  ஆர்ப்பாட்டம் நான் செய்ய, பொடிசுகள் எல்லாம் சாப்பிடாமல் எனக்காக சத்யாகிரகம் இருக்க, ஒரே நெகிழும் கணங்கள் தான். இருந்தாலும் என்ன செய்வது? ஞாயிற்றுக்கிழமை இரவில் ரிசர்வ் செய்யாமல் தனியாக ஒரு பதின்ம வயது பெண்ணை எந்த பெற்றோர் தான் நீண்ட வழி அனுப்புவார்கள்?

ஒரு வழியாய் எனக்கு நானே சமாதானம் சொல்லி லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டு  ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த போது, பக்கத்து ஊர் கோயிலுக்குப் போயிருந்த பெரியப்பா உள்ளே வந்தார்.சூட்கேசிற்கு மேலே அழுமூஞ்சியாய் உட்கார்ந்து கொண்டிருந்த என்னை தனது சாந்தமான கண்களால் பார்த்து கோபிக் கண்ணு.. இன்னைக்கு நீங்க போக வேண்டாம்.. சரியா’ என்றார்.அப்பாவின் பக்கம் திரும்பி ‘கோபிக்கு வெள்ளிக்கிழமை போற மாதிரி ரிசர்வ் செஞ்சிடு’ எனச் சொன்னார்.நானும் குட்டீஸ்களும் போட்ட சப்தத்தில் தெருவே ஒடி வந்து எட்டிப் பார்த்தது.’கோபியக்கா மட்டுமில்லேடா.. நீங்க எல்லாருமே வெள்ளிக்கிழமை போனா போதும்’ என்று அவர் சொன்ன போது நாங்கள் தொண்டை கிழிய கத்தியபடி மொட்டை மாடிக்கு ஓடிக் கொண்டிருந்தோம். 

அடுத்த நாள் வழக்கம் போல சிறுசுகள் நாங்கள் கூத்தும் கும்மாளமுமாயிருந்தோம்.ஆனால் பெரியவர்களின் முகத்தில் ஒருவித அச்சம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது.நன்கு கவனிக்கையில் அவர்கள் அனைவரும் எங்கள் பாட்டியை வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே தாங்குவதாக தோன்றியது.பிற ஊர்களிலிருந்தும் உறவினர்கள் வந்து பாட்டியுடன் இடைவிடாது பேசிக் கொண்டேயிருந்தார்கள்.எங்கள் ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் அதிசயமாக மொத்தமாக வந்து பாட்டியுடன் பேசிச் சென்றபோது தான் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென நினைக்கத் தோன்றினேன்.கூனி அத்தையிடம் யாருமில்லாத வேளையில் கேட்ட பொழுது தீர்க்கமாக சொன்னாள்:”உம் பெரியப்பா எதுக்கு எல்லாத்தையும் அப்புறமா போகச் சொல்றான்.. பாட்டி சாகப் போறா.. அவன் கணிச்சா சரியா இருக்கும்.”

ஏதோ ஒரு உணர்வு உந்தப்பட பாட்டியின் அருகில் சென்றேன்.அவள் கைகளை பிடித்தேன்.கண்களில் தாரை தாரையாக என்னை அறியாமலே கொட்டிக் கொண்டிருந்தது.என்ன இது சின்னப் புள்ள மாதிரி என்று அவள் என்னை கட்டிக் கொண்டாள்.’எம்பத்திஏலு வயசாகுது.இதுக்கு மேல இருந்து என்ன செய்யப் போறஞ் சொல்லு’ என்று என் தலையை தடவினாள். உன் வயசு குழந்தைகள்ல நீதாண்டி மூத்தவ.எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கணும் தாயி.. ஏண்டி கோபி.. நாளைக்கு இவ போகப் போறா.. இன்னைக்கு அட்வைஸ் பண்றாளேன்னு நினைக்கிறயா என்று பாட்டி கேட்க அழுகையை மீறிய சிரிப்பு பொத்துகிட்டு வந்தது.பாட்டியின் மடியிலேயே படுத்திருந்தேன்.எப்போது தூங்கினேன் யார் அழைத்து வந்து படுக்க வைத்தார்கள் என்றெல்லாம் நினைவில்லை.முதல் மாடியில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தவளை பெருத்த அழுகுரல்கள் எழுப்பி விட்டன.போய் விட்டாள் பாட்டி என மனதிற்குள் சொல்லியவாறே அலமாரிக் கண்ணாடியை பார்த்து நிதானமாக கையாலேயே தலை வாரி முகங்கழுவி கீழே போகும் போது ‘கட்டையில போக வேண்டிய நான் இருக்கும் போது எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டியே சுந்தரேசா’ என ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

காலையில் நியூஸ் பேப்பர் வாங்க போன போது நெஞ்சு வலிக்குதென பெரியப்பா தனது கூட்டாளிகளிடம் சொன்னாராம்.கைவல்யம் மாமா பெரியப்பாவை வீட்டிற்கு ஆட்டோவில் கொண்டு வந்து விட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாம்.பெரியம்மா அவரது பிள்ளைகள் நாங்கள் உட்பட அனைவருக்கும், பெரியப்பாவின் மரண துக்கத்தை விட, அவர் தனது விடைபெறுதலை கணித்த விதமும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாது தன்னுள்ளேயே வைத்திருந்த அமானிடத் தன்மையுமே பெரிதாக இருந்தது.பெரியப்பாவின் மரணத்தில் அதிகம் துக்கப் பட்டவர்கள் எனது காலேஜ் ரூம் மேட்ஸ் தான்.அவர்களுக்கு இனி யார் நான் ஊருக்கு சென்று வரும் ஒவ்வொரு வேளையும் ஒரு கிலோ மக்ரூன் வாங்கிக் கொடுப்பார்களாம்?

அதன் பின்னர் பெரியப்பாவைப் பற்றிய புதுப்புது கதைகள் சம்பவங்கள் எங்கள் காதுகளில் அடிக்கடி ஒலிக்கத் தொடங்கியது.கடைத் தெருவுக்கு போகும் போது, கோவிலுக்கு போகும் போது, அபூர்வமாக ஆற்றிற்கு குளிக்கப் போகும் பொழுது, நான் நாச்சியப்பனின் மகள் என்பதை விட சுந்தரேசனின் தம்பி மகளாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தப் படுபவளாயிருக்கிறேன்.எனது அப்பாவும் நேர்மையான மற்றும் எந்த நேரத்திலும் பிறருக்கு உதவி செய்யும் அரசு ஊழியர் என்ற போதிலும், மருத்துவத்திலும் ஜாதகத்திலும் தேர்ந்த தனது அண்ணனின் செல்வாக்கோடு அவரால் போட்டிபோட இயலவில்லை.நானும் ஒரு கட்டத்தில் நாச்சியப்பன் பொண்ணுன்னு அறிமுகப்படுத்திக்கிறத விட்டுட்டு, சுந்தரேசன் பெரியப்பாவோட தம்பி பொண்ணுன்னு சொல்ற அளவுக்கு மாறிட்டேன்.

ஒவ்வொருத்தர் பெயருக்கும் ஒரு பெயர்க்காரணம் இருக்கும்.எனக்கு ஏம்மா கிருஷ்ண கோபிகான்னு பேரு வச்சே அப்படின்னு ஒரு நாள்  அம்மா கிட்ட கேட்டேன்.அப்போ அம்மா புள்ளத்தாச்சியா இருந்தாளாம்.திடீர்ன்னு ஒரு நா பெரியப்பா நிறைய ஸ்வீட்ஸ் வாழைக்கொல வெத்தில பாக்கு போயில பிரியாணி அரிசின்னு நிறைய வழக்கத்துக்கு மாறா வாங்கிட்டு வந்தார் களாம்.என்னடா இவ்வளவும் உன் தங்கச்சிக்காடா என்று பாட்டி கேட்ட போது-பெரியப்பா எங்கம்மாவை தங்கச்சி என்றே அழைப்பார்.அம்மா பெரியாப்பாவை எப்படி அழைப்பாள் என கவனித்ததாக நினைவில்லை-நாளைக்கு குழந்தை பிறக்கப் போதுல்ல அதான் இன்னைக்கே வாங்கியாந்துட்டேன் என்றாராம்.அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.என்ன இவன் இப்படி பேசுறான்னு.அப்போது அம்மா வெறும் ஏழேகால் மாதம் தானாம்.அவளுக்கு நான் பிறக்கப் போற மாதிரி எந்த சிம்ப்டஸும் துளி கூட தோணலையாம். ஆனால் மறுநாள்.. பெரியப்பா சொன்ன மாதிரியே கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு நான் குட்டிப் பாப்பாவாய் பொறந்தேனாம்.இதைச் சொல்லும் போது அம்மாவின் கண்களைப் பார்த்தேன்.அவள் வேறேதோ உலகத்தில் இருப்பது போலத் தோன்றியது.அது எனக்கும் அவளுக்குமேயான தனி உலகம்.உன்னோட பத்து மாச கனவை ஏழரை மாசத்துலேயே கலச்சுட்டேனா அம்மா என்று ஒருமுறை அவளிடம் கேட்டிருக்கிறேன்.அதற்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை.ஆனால் அன்று என்னை அவள் முத்தமிட்ட போது அவளது உடல் ஒருமுறை வெடுக்கென ஆடியதை அந்தரங்கமாக என்னால் உணர முடிந்தது.

ஒவ்வொரு முறை எங்களது குடும்ப கோவிலுக்குப் போய் பொங்கல் வைத்து படையலிட்டு வரும் போதும் அம்மாவிற்கு காய்ச்சல் வந்துவிடுவது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நடந்து வருகிறது.மூன்று நாட்களுக்கு வெறுமனே படுக்கையில் தனியறையில் கிடப்பாள்.எந்த மருந்துகளும் எடுத்துக் கொள்ள மாட்டாள்.யாரும் அவளை மருந்து சாப்பிடு எனச் சொல்லி நான் கேட்டதும் இல்லை.ஒரு நாளைக்கு குறைந்தது எழுபது முறை கோபி கோபி என சலிக்க சலிக்க கூப்பிடுபவள் அந்நாட்களில் நான் அருகில் போனால் கூட ஒரு வெறித்த பார்வையுடன் முகத்தை திருப்பிக் கொள்வாள்.பாட்டியும் அப்பாவும் அந்நாட்களில் என்னை அம்மாவின் அருகில் போக விடாது பார்த்துக் கொள்வார்கள்.நானும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இதை ஒரு சகஜ  நிகழ்வாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.அந்நாட்களில் வாசல் தொளிப்பது கோலம் போடுவது சமைப்பது எல்லாம் பாட்டி இன்சார்ஜ் எடுத்துக் கொள்வாள்.அப்பா கூட சமயங்களில் சமையற்கட்டில் எல்லா வேலைகளையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அந்நாட்களில் தொலைக்காட்சி பெரும்பாலும் வேறு யாராவது வந்தாலொழிய ஆன் செய்யப்படமாட்டாது.

அண்மையில்  குடும்ப கோவிலுக்கு சென்று திரும்பும் போது நிறைந்த பௌர்ணமி.இரவில் மொட்டை மாடியில் நிலவொளியில் நனைந்து கொண்டே வெகு நேரம் ஐபாடில் நேரம் போவதே தெரியாமல் பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.பக்கத்து தெரு சூசையப்பர் கோவில் மணி ஒலித்த போது தான் மணி மூன்று எனத் தெரிய வந்தது.கீழ் தளத்தில் உள்ள எனது அறைக்கு போகும் போது அம்மாவின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது.ஆர்வம்  மேலிட பூனை போல காலடி எடுத்து வைத்து சாவித் துவாரத்தில் கண் வைத்து உள்ளே பார்த்தேன்.அம்மா ட்ரங்கு பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.அவளது முகத்தில் அசாத்திய ஒரு ஒளி வழிந்து கொண்டிருந்தது.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை.அந்த ட்ரங்கு பெட்டிக்குள் என்ன இருக்கும் என்பதே என் முன் இருக்கும் ஒற்றை நினைவாயிருந்தது.ஆனால் அது குறித்து யோசிப்பதே எனக்கு சாத்தியம் இல்லாததாகவும் இருந்தது.வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பொருட்களையும் அறிந்திருந்த  எனக்கு வீட்டில் ட்ரங்கு பெட்டி என்ற ஒன்று இருப்பதே பெரும் புதிராய் இருந்தது.சில நாட்கள் மெதுவாய் கழிந்தன.அப்பாவின் பள்ளி நண்பர் ஒருவரின் மகளின் கல்யாணத்திற்கு அம்மாவும் பாட்டியும் சென்றிருந்தார்கள்.எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தினேன்.வீடு முழுக்க மின் விளக்குகளை போட்டேன்.எல்லா சாமிகளையும் கும்பிட்டுவிட்டு காப்பாத்துப்பா என நெற்றியில் குங்குமம் விபூதி வைத்துக் கொண்டேன்.பின்னர் அந்த அறையை திகிலுடன் திறந்தேன்.எனது இதயத் துடிப்பின் ஓசையை இத்தனை தெளிவாக கேட்பது இது இரண்டாவது முறை.பரண் முழுக்க ஒரே அட்டை பெட்டிகள்.அதிகம் தூசு இல்லாத ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் திறந்து பார்த்தேன்.சிறு ட்ரங்கு பெட்டி இருந்த அட்டைப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஒனிடா பூதங்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

ப்ப்ச்ச்..பெரும் ஏமாற்றமாயிருந்தது எனக்கு.இதுக்குத் தான் இவ்வளவு அளப்பறையை கொடுத்தாளா இவள் என்றது மனது.அம்மாவின் மீது மெல்ல ஒரு பாசி படரத் தொடங்கியது.ட்ரங்கு பெட்டியை மூடிய போது ஒலித்த கிரீச் ஒலியின் மீது ஈர்ப்பு ஏற்பட மீண்டும் மீண்டும் பெட்டியை திறப்பதும் மூடுவதுமாக இருந்தேன்.மீண்டும் ஒருமுறை குளித்து சூடாக பால் அருந்திவிட்டு படுக்கையில் விழுந்த போது அம்மாவை புரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.ஒரு வகையில் அவள் பரிதாபம் கொள்ளத் தக்கவளாய் தோன்றினாள்.சிரிக்கத் தான் தோன்றியது.மெல்ல சிரித்தேன்.லூசு மம்மி என்று உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

ஒன்றை முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன்.அம்மா எம்பிராய்டரியில்  கைதேர்ந்தவள்.அந்த கிரீச் பெட்டிக்குள் சட்டை ஒன்று இருந்தது. புதிதாய் பிறந்த சின்னஞ்ச்சிறு குழந்தை அணியக் கூடிய சட்டை.அதில் உத்தவ் என எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.ஊகிக்க எனக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை.ஆண்குழந்தை தான் பிறக்கும் பிறக்க வேண்டும் என ஆசையாய் இருந்திருக்கிறாள்.நான் பிறந்து விட்டேன்.ஏமாற்றம்.அதிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.ரொம்ப சின்னப்புள்ளதனமால்ல பிஹேவ் பண்றா இந்த ஜானகி என்று சிரித்தது மனசு.

திருமணத்திற்கு போய்விட்டு வந்த அம்மா என்னைப் பாரத்த உடனேயே  என்ன இது கோலம் என்றாள்.சென்னையிலிருந்த போது பல்கலைக்கழக  விழாவொன்றில் ஜீன்சும் டீ சர்ட்டும் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படத்தை அம்மாவிடம் காட்டியபோது முத்தமிட்டு கெஞ்சும் குரலில் சொன்னாள் ‘அங்கே என்ன வேணா உன் இஷ்டப்படி போட்டுக்கோ செல்லம்   இங்கே ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணிடாத கோபிம்மா’.அத்தி பூத்தார் போன்று அபூர்வமாய் ஒலிக்கும் அம்மாவின் கண்டிப்பான குரல் நினைவை கலைத்தது ‘ஏய் உன்னைத்தாண்டீ கோபி இதென்ன கோலம்’.எந்த ஒரு அதிர்ச்சியும் முகத்தில் காட்டாமல் அவள் கண்கள் பார்த்து சொன்னேன் “நான் கோபி இல்ல அம்மா..உத்தவ்”.அம்மாவின் முகத்தில் ரிக்டர் ஸ்கேல் எட்டு புள்ளிகளை காட்டியது.சட்டென சுதாரித்துக் கொண்டாள்.எப்படி ஊகித்தாள் எனத் தெரியவில்லை.விறுவிறுவென அறையை திறந்தாள்.கிரீச் சப்தம் கேட்டது.மண்ணெண்ணெய் பாட்டலோடு பின்பக்கம் போனாள்.துணி எரியும் மணம் காற்றில் வந்தது.

‘அப்போ என்னை பிடிக்கல இல்ல’.எதுவும் பேசாது கடந்து செல்ல முயற்சித்தாள்.அவள் கைகளை பிடித்து பின்னுக்கு இழுத்தேன்.’ஆம்பளைன்னா அவ்வளவு உசத்தியா உனக்கு’ என் வாயிலிருந்து ஒலித்த குரலின் அடர்த்தி எனக்கே அதிகமாயிருந்தது.அழத்தொடங்குவாள் என்ற எனது நினைப்பை பொய்யாக்கிய அவளின் முகத்தில் ஒருவித நிம்மதி பரவத் தொடங்கியது,சாட்சிகளோடு பிடிபட்ட பல நாள் திருடனின் முகத்தில் பரவும் நிம்மதி.பேசஆரம்பித்தாள்.கிருஷ்ண ஜெயந்தி அன்று நான் பிறந்ததால் கிருஷ்ண கோபிகா என்று பெயர் வைக்கலாம் என சொல்லிய பெரியப்பா, இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஆண் குழந்தை ஒன்று பிறக்கப் போவதாகவும் அவனிற்கு உத்தவ் என பெயர் வைக்கலாம் என்றும் சொன்னதாகவும், அவர் சொல்லியது போன்றே அடுத்த இரண்டு வருடங்கழித்து கிருஷ்ண ஜெயந்தியன்று உத்தவ் பிறந்ததாகவும்,ஆனால் பிறந்த அன்றே அவன் இறந்துவிட்டதாகவும்,அந்த சட்டை உத்தவ் வயிற்றில் இருக்கும் போது தைத்தது என்றும்.எப்படி இவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கதை கோர்க்கிறாள் என ஆச்சர்யம் வந்தது.பொய்கள் பேசி பழக்கப்படாதவர்கள் பொய் பேசுவது எத்தனை கஷ்ட்டம் என்பது அம்மாவின் உடல் மொழியிலேயே தெரிந்தது.இது போன்றான ரகசிய தருணங்களின் முன் நிற்கும் போது நினைவுக்கு வருபவள் எப்போதும் போல இப்போதும் நினைவுக்கு வந்தாள்.

‘பொண்ணுக்கு உன்வயசு தான்.நீ எப்போடி கல்யாணச் சாப்பாடு போடப் போறே’ என்றபடி வரவேற்றாள் கூனி அத்தை.அத்தை என்று அவளை நான் சொல்வதால் வயதை குறைவாக நினைத்து விடாதீர்கள்.எங்கள் பாட்டிக்கு ஆறு வருஷம் அவள் இளமை.திருமணமே செய்து கொள்ளாதவள்.இந்த வயதிலும் அப்பளம் வடகம் மோர்மிளகாய் விற்று வாழ்க்கையை சுயமாய் நடத்தி வருபவள்.பெரிய சேமிப்பு அவளது வங்கிக் கணக்கில் இருப்பதாகவும் தனது மரணத்திற்குப் பிறகு அதை பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு போய்ச் சேரவேண்டும் என்று எழுதி வைத்திருப்பதாகவும் பேச்சு உண்டு.குடும்பத்தின் சகல கதைகளின் களஞ்சியம் அவள்.’சொல்லுடி..என்ன எங்கிட்ட தெரிஞ்சுக்கணும்னு வந்திருக்க..’. உத்தவ் பற்றி என்றேன். வெறும் வாயிலேயே அவல் மெல்பவளுக்கு அரிசியை கொடுத்தால் கேட்கவா வேண்டும்.காப்பி குடிக்கிறியா என்றாள்.அப்பளவாடையுடன் காப்பி பிரமாதமான சுவையுடன் இருந்தது.

‘உத்தவ் பொறந்த பலன கணிச்ச உன்னோட பெரியப்பன் உத்தவ் நம்ம வீட்ல வளர்ந்தா எல்லாத்துக்குமே ஆகாது,தொடர்ந்து துர்மரணங்க நடக்கும்,நம்ம தலைமுறை குழந்தைங்க எல்லோரும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்கன்னு  சொன்னான்.அதனால பெரியவங்க எல்லாரும் முடிவு பண்ணி உத்தவ்வை எங்கேயோ போய் போட்டுட்டு வந்துட்டாங்க’ உண்மையை உடைத்தாள் அத்தை.உடன் பிறந்த தம்பி ஒருவன் எனக்கு இருக்கிறான் என்ற நினைப்பே என்னை பெரிதும் கிளர்ச்சியடைய வைத்தது.எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பேன்.ஏன் இப்போது கூட தெருவில் யாரோ ஒரு அக்காவும் தம்பியும் பேசிச் செல்வதை கடந்து செல்லும் போது மெல்லிய வெறுமை என்னுள் பரவிச் செல்வதையும், அவர்களிருவரையும் ஒருகணம் நின்று அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பதையும் என்னால் ஒருபோதும் தடுக்க முடிபதில்லையே. சிறுவயதில் பிரிந்த குழந்தையை பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தாரும் மீண்டும் கண்டடையும் செய்திகள் எத்தனை படித்திருக்கிறேன். மனம் ஏனோ இலகுவாயிருந்தது. முறுக்கு இருந்தா கொடேன் என்றேன் அத்தையிடம்.

அம்மாவை கட்டிக் கொண்டு முத்தமிட்டேன். அத்தை சொன்னாங்க அம்மா கவலைப்படாதே உத்தவ்வை நாம கண்டுபிடிச்சுடலாம். என்ன சொன்னா என்று கேட்டாள் பாட்டி. சொன்னேன். அம்மாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லிவைத்தாற்போல ஒரே சமயத்தில் பெருமூச்சு விட்டார்கள். ’கூனி பொய் சொல்றா கோபி.உத்தவ் இறந்துட்டான்’ என்றாள் பாட்டி. வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த அம்மாவின் விரல்களில்  ரத்தம் எட்டிப் பார்த்தது. சாவகாசமாய் ரத்தத்தை துடைத்தபடியே அம்மா சொன்னாள் ‘எம்புள்ள இறக்கல.கொன்னுட்டாங்க’. பாட்டி ஒரு நிமிடம் தலை குனிந்தபடி இருந்து பின்னர் எழுந்து போனாள். ’கோவில்ல ஒரு நடுகல் இருக்குமே அங்க தான் தம்பியை புதைச்சிருக்காங்க’  ‘யார் கொன்னது’  ‘உங்க பெரியப்பா. அப்பாவும் பாட்டியும் உடந்தை’  ‘அப்பா வரட்டும் கேக்றேன்’  ‘வேணாண்டா.. செத்துப் போயிடுவாரு’  ‘சாகட்டும்’

ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது அந்த கோவில்.நடுகல் முன்னால் உட்கார முயன்று தலை சுற்றியபடி கீழே விழுந்தேன்.எத்தனை மணி நேரம் அழுதேன் என்று தெரியவில்லை. உடல் குலுங்கி ஓய்ந்து மயங்கி பின்னர் தெளிந்து எனது சுவாசத்தை மிகத் துல்லியமாக உணர்ந்த போது என்னை சுற்றிலும் கும்மிருட்டு பரவியிருப்பதை உணரத் தொடங்கினேன்.ட்ரங்குப் பெட்டியின் கிரீச் ஒலியும் ஒனிடா பூதங்களின் சிரித்த முகமும் ஒரு சேர நினைவிற்கு வந்தன.