15 Apr 2012

ட்ரங்குப் பெட்டியும் ஒனிடா பூதங்களும்

எனது பெரியப்பா எக்ஸ் தாசில்தார் என்பதை விடவும் நாட்டு மருத்துவராகவும் ஜோதிடராகவும் தான் அதிகம் அறியப்பட்டவர்.ஆனால் அவர் மிக செலக்டிவாக தான் தேர்ந்து எடுத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவமும் ஜாதகமும் பார்த்து வந்தார்.நீங்க தான் பார்க்கணும் அய்யா என்று பலர் எத்தனை முறை கெஞ்சினாலும் அவர்களை பக்கத்து தெரு கொல்லிமலை கைவல்யத்திடம் போகச் சொல்லி அனுப்பிவிடுவார். கைவல்யம் அங்கிள் எனது பெரியப்பாவின் கல்லூரிச் செலவிற்கு பலமுறை பணம் கொடுத்து உதவியவர் என்பது எங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நான் இரண்டாம் ஆண்டு என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போது பொங்கல் கொண்டாட ஐந்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.பெரியப்பா,சித்தப்பா, அத்தை அவரவர் வீட்டு வாண்டுகள் என ஒட்டுமொத்த குடும்பமே எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.எனது தலைமுறையில் நான் தான் மூத்தவள் என்பதாலும் மெட்ராஸில் படிப்பவள் என்பதாலும் குட்டீஸ்களுக்கு என் மீது அளவற்ற ப்ரியம்.கொஞ்சம் மரியாதை கலந்த பயமும் அவர்களுக்கு என் மீது உண்டு. நாங்கள் அனைவரும் போட்ட ஆட்டத்தில் வீடே அலறியது.மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை.ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்ல முன்பதிவு சீட்டுகள் இல்லாததால் சனிக்கிழமையே ரிசர்வ் செய்திருக்கிறார் அப்பா என்று தெரிய வந்த போது எனக்கு கடும் கோபம் வந்தது. அழுது  ஆர்ப்பாட்டம் நான் செய்ய, பொடிசுகள் எல்லாம் சாப்பிடாமல் எனக்காக சத்யாகிரகம் இருக்க, ஒரே நெகிழும் கணங்கள் தான். இருந்தாலும் என்ன செய்வது? ஞாயிற்றுக்கிழமை இரவில் ரிசர்வ் செய்யாமல் தனியாக ஒரு பதின்ம வயது பெண்ணை எந்த பெற்றோர் தான் நீண்ட வழி அனுப்புவார்கள்?

ஒரு வழியாய் எனக்கு நானே சமாதானம் சொல்லி லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டு  ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்த போது, பக்கத்து ஊர் கோயிலுக்குப் போயிருந்த பெரியப்பா உள்ளே வந்தார்.சூட்கேசிற்கு மேலே அழுமூஞ்சியாய் உட்கார்ந்து கொண்டிருந்த என்னை தனது சாந்தமான கண்களால் பார்த்து கோபிக் கண்ணு.. இன்னைக்கு நீங்க போக வேண்டாம்.. சரியா’ என்றார்.அப்பாவின் பக்கம் திரும்பி ‘கோபிக்கு வெள்ளிக்கிழமை போற மாதிரி ரிசர்வ் செஞ்சிடு’ எனச் சொன்னார்.நானும் குட்டீஸ்களும் போட்ட சப்தத்தில் தெருவே ஒடி வந்து எட்டிப் பார்த்தது.’கோபியக்கா மட்டுமில்லேடா.. நீங்க எல்லாருமே வெள்ளிக்கிழமை போனா போதும்’ என்று அவர் சொன்ன போது நாங்கள் தொண்டை கிழிய கத்தியபடி மொட்டை மாடிக்கு ஓடிக் கொண்டிருந்தோம். 

அடுத்த நாள் வழக்கம் போல சிறுசுகள் நாங்கள் கூத்தும் கும்மாளமுமாயிருந்தோம்.ஆனால் பெரியவர்களின் முகத்தில் ஒருவித அச்சம் பரவியிருந்ததை என்னால் உணர முடிந்தது.நன்கு கவனிக்கையில் அவர்கள் அனைவரும் எங்கள் பாட்டியை வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே தாங்குவதாக தோன்றியது.பிற ஊர்களிலிருந்தும் உறவினர்கள் வந்து பாட்டியுடன் இடைவிடாது பேசிக் கொண்டேயிருந்தார்கள்.எங்கள் ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் அதிசயமாக மொத்தமாக வந்து பாட்டியுடன் பேசிச் சென்றபோது தான் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென நினைக்கத் தோன்றினேன்.கூனி அத்தையிடம் யாருமில்லாத வேளையில் கேட்ட பொழுது தீர்க்கமாக சொன்னாள்:”உம் பெரியப்பா எதுக்கு எல்லாத்தையும் அப்புறமா போகச் சொல்றான்.. பாட்டி சாகப் போறா.. அவன் கணிச்சா சரியா இருக்கும்.”

ஏதோ ஒரு உணர்வு உந்தப்பட பாட்டியின் அருகில் சென்றேன்.அவள் கைகளை பிடித்தேன்.கண்களில் தாரை தாரையாக என்னை அறியாமலே கொட்டிக் கொண்டிருந்தது.என்ன இது சின்னப் புள்ள மாதிரி என்று அவள் என்னை கட்டிக் கொண்டாள்.’எம்பத்திஏலு வயசாகுது.இதுக்கு மேல இருந்து என்ன செய்யப் போறஞ் சொல்லு’ என்று என் தலையை தடவினாள். உன் வயசு குழந்தைகள்ல நீதாண்டி மூத்தவ.எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கணும் தாயி.. ஏண்டி கோபி.. நாளைக்கு இவ போகப் போறா.. இன்னைக்கு அட்வைஸ் பண்றாளேன்னு நினைக்கிறயா என்று பாட்டி கேட்க அழுகையை மீறிய சிரிப்பு பொத்துகிட்டு வந்தது.பாட்டியின் மடியிலேயே படுத்திருந்தேன்.எப்போது தூங்கினேன் யார் அழைத்து வந்து படுக்க வைத்தார்கள் என்றெல்லாம் நினைவில்லை.முதல் மாடியில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தவளை பெருத்த அழுகுரல்கள் எழுப்பி விட்டன.போய் விட்டாள் பாட்டி என மனதிற்குள் சொல்லியவாறே அலமாரிக் கண்ணாடியை பார்த்து நிதானமாக கையாலேயே தலை வாரி முகங்கழுவி கீழே போகும் போது ‘கட்டையில போக வேண்டிய நான் இருக்கும் போது எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டியே சுந்தரேசா’ என ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

காலையில் நியூஸ் பேப்பர் வாங்க போன போது நெஞ்சு வலிக்குதென பெரியப்பா தனது கூட்டாளிகளிடம் சொன்னாராம்.கைவல்யம் மாமா பெரியப்பாவை வீட்டிற்கு ஆட்டோவில் கொண்டு வந்து விட்ட சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாம்.பெரியம்மா அவரது பிள்ளைகள் நாங்கள் உட்பட அனைவருக்கும், பெரியப்பாவின் மரண துக்கத்தை விட, அவர் தனது விடைபெறுதலை கணித்த விதமும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாது தன்னுள்ளேயே வைத்திருந்த அமானிடத் தன்மையுமே பெரிதாக இருந்தது.பெரியப்பாவின் மரணத்தில் அதிகம் துக்கப் பட்டவர்கள் எனது காலேஜ் ரூம் மேட்ஸ் தான்.அவர்களுக்கு இனி யார் நான் ஊருக்கு சென்று வரும் ஒவ்வொரு வேளையும் ஒரு கிலோ மக்ரூன் வாங்கிக் கொடுப்பார்களாம்?

அதன் பின்னர் பெரியப்பாவைப் பற்றிய புதுப்புது கதைகள் சம்பவங்கள் எங்கள் காதுகளில் அடிக்கடி ஒலிக்கத் தொடங்கியது.கடைத் தெருவுக்கு போகும் போது, கோவிலுக்கு போகும் போது, அபூர்வமாக ஆற்றிற்கு குளிக்கப் போகும் பொழுது, நான் நாச்சியப்பனின் மகள் என்பதை விட சுந்தரேசனின் தம்பி மகளாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தப் படுபவளாயிருக்கிறேன்.எனது அப்பாவும் நேர்மையான மற்றும் எந்த நேரத்திலும் பிறருக்கு உதவி செய்யும் அரசு ஊழியர் என்ற போதிலும், மருத்துவத்திலும் ஜாதகத்திலும் தேர்ந்த தனது அண்ணனின் செல்வாக்கோடு அவரால் போட்டிபோட இயலவில்லை.நானும் ஒரு கட்டத்தில் நாச்சியப்பன் பொண்ணுன்னு அறிமுகப்படுத்திக்கிறத விட்டுட்டு, சுந்தரேசன் பெரியப்பாவோட தம்பி பொண்ணுன்னு சொல்ற அளவுக்கு மாறிட்டேன்.

ஒவ்வொருத்தர் பெயருக்கும் ஒரு பெயர்க்காரணம் இருக்கும்.எனக்கு ஏம்மா கிருஷ்ண கோபிகான்னு பேரு வச்சே அப்படின்னு ஒரு நாள்  அம்மா கிட்ட கேட்டேன்.அப்போ அம்மா புள்ளத்தாச்சியா இருந்தாளாம்.திடீர்ன்னு ஒரு நா பெரியப்பா நிறைய ஸ்வீட்ஸ் வாழைக்கொல வெத்தில பாக்கு போயில பிரியாணி அரிசின்னு நிறைய வழக்கத்துக்கு மாறா வாங்கிட்டு வந்தார் களாம்.என்னடா இவ்வளவும் உன் தங்கச்சிக்காடா என்று பாட்டி கேட்ட போது-பெரியப்பா எங்கம்மாவை தங்கச்சி என்றே அழைப்பார்.அம்மா பெரியாப்பாவை எப்படி அழைப்பாள் என கவனித்ததாக நினைவில்லை-நாளைக்கு குழந்தை பிறக்கப் போதுல்ல அதான் இன்னைக்கே வாங்கியாந்துட்டேன் என்றாராம்.அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.என்ன இவன் இப்படி பேசுறான்னு.அப்போது அம்மா வெறும் ஏழேகால் மாதம் தானாம்.அவளுக்கு நான் பிறக்கப் போற மாதிரி எந்த சிம்ப்டஸும் துளி கூட தோணலையாம். ஆனால் மறுநாள்.. பெரியப்பா சொன்ன மாதிரியே கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு நான் குட்டிப் பாப்பாவாய் பொறந்தேனாம்.இதைச் சொல்லும் போது அம்மாவின் கண்களைப் பார்த்தேன்.அவள் வேறேதோ உலகத்தில் இருப்பது போலத் தோன்றியது.அது எனக்கும் அவளுக்குமேயான தனி உலகம்.உன்னோட பத்து மாச கனவை ஏழரை மாசத்துலேயே கலச்சுட்டேனா அம்மா என்று ஒருமுறை அவளிடம் கேட்டிருக்கிறேன்.அதற்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை.ஆனால் அன்று என்னை அவள் முத்தமிட்ட போது அவளது உடல் ஒருமுறை வெடுக்கென ஆடியதை அந்தரங்கமாக என்னால் உணர முடிந்தது.

ஒவ்வொரு முறை எங்களது குடும்ப கோவிலுக்குப் போய் பொங்கல் வைத்து படையலிட்டு வரும் போதும் அம்மாவிற்கு காய்ச்சல் வந்துவிடுவது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நடந்து வருகிறது.மூன்று நாட்களுக்கு வெறுமனே படுக்கையில் தனியறையில் கிடப்பாள்.எந்த மருந்துகளும் எடுத்துக் கொள்ள மாட்டாள்.யாரும் அவளை மருந்து சாப்பிடு எனச் சொல்லி நான் கேட்டதும் இல்லை.ஒரு நாளைக்கு குறைந்தது எழுபது முறை கோபி கோபி என சலிக்க சலிக்க கூப்பிடுபவள் அந்நாட்களில் நான் அருகில் போனால் கூட ஒரு வெறித்த பார்வையுடன் முகத்தை திருப்பிக் கொள்வாள்.பாட்டியும் அப்பாவும் அந்நாட்களில் என்னை அம்மாவின் அருகில் போக விடாது பார்த்துக் கொள்வார்கள்.நானும் கொஞ்ச காலத்திற்கு பிறகு இதை ஒரு சகஜ  நிகழ்வாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.அந்நாட்களில் வாசல் தொளிப்பது கோலம் போடுவது சமைப்பது எல்லாம் பாட்டி இன்சார்ஜ் எடுத்துக் கொள்வாள்.அப்பா கூட சமயங்களில் சமையற்கட்டில் எல்லா வேலைகளையும் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அந்நாட்களில் தொலைக்காட்சி பெரும்பாலும் வேறு யாராவது வந்தாலொழிய ஆன் செய்யப்படமாட்டாது.

அண்மையில்  குடும்ப கோவிலுக்கு சென்று திரும்பும் போது நிறைந்த பௌர்ணமி.இரவில் மொட்டை மாடியில் நிலவொளியில் நனைந்து கொண்டே வெகு நேரம் ஐபாடில் நேரம் போவதே தெரியாமல் பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.பக்கத்து தெரு சூசையப்பர் கோவில் மணி ஒலித்த போது தான் மணி மூன்று எனத் தெரிய வந்தது.கீழ் தளத்தில் உள்ள எனது அறைக்கு போகும் போது அம்மாவின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது.ஆர்வம்  மேலிட பூனை போல காலடி எடுத்து வைத்து சாவித் துவாரத்தில் கண் வைத்து உள்ளே பார்த்தேன்.அம்மா ட்ரங்கு பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.அவளது முகத்தில் அசாத்திய ஒரு ஒளி வழிந்து கொண்டிருந்தது.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை.அந்த ட்ரங்கு பெட்டிக்குள் என்ன இருக்கும் என்பதே என் முன் இருக்கும் ஒற்றை நினைவாயிருந்தது.ஆனால் அது குறித்து யோசிப்பதே எனக்கு சாத்தியம் இல்லாததாகவும் இருந்தது.வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பொருட்களையும் அறிந்திருந்த  எனக்கு வீட்டில் ட்ரங்கு பெட்டி என்ற ஒன்று இருப்பதே பெரும் புதிராய் இருந்தது.சில நாட்கள் மெதுவாய் கழிந்தன.அப்பாவின் பள்ளி நண்பர் ஒருவரின் மகளின் கல்யாணத்திற்கு அம்மாவும் பாட்டியும் சென்றிருந்தார்கள்.எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தினேன்.வீடு முழுக்க மின் விளக்குகளை போட்டேன்.எல்லா சாமிகளையும் கும்பிட்டுவிட்டு காப்பாத்துப்பா என நெற்றியில் குங்குமம் விபூதி வைத்துக் கொண்டேன்.பின்னர் அந்த அறையை திகிலுடன் திறந்தேன்.எனது இதயத் துடிப்பின் ஓசையை இத்தனை தெளிவாக கேட்பது இது இரண்டாவது முறை.பரண் முழுக்க ஒரே அட்டை பெட்டிகள்.அதிகம் தூசு இல்லாத ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் திறந்து பார்த்தேன்.சிறு ட்ரங்கு பெட்டி இருந்த அட்டைப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஒனிடா பூதங்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

ப்ப்ச்ச்..பெரும் ஏமாற்றமாயிருந்தது எனக்கு.இதுக்குத் தான் இவ்வளவு அளப்பறையை கொடுத்தாளா இவள் என்றது மனது.அம்மாவின் மீது மெல்ல ஒரு பாசி படரத் தொடங்கியது.ட்ரங்கு பெட்டியை மூடிய போது ஒலித்த கிரீச் ஒலியின் மீது ஈர்ப்பு ஏற்பட மீண்டும் மீண்டும் பெட்டியை திறப்பதும் மூடுவதுமாக இருந்தேன்.மீண்டும் ஒருமுறை குளித்து சூடாக பால் அருந்திவிட்டு படுக்கையில் விழுந்த போது அம்மாவை புரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.ஒரு வகையில் அவள் பரிதாபம் கொள்ளத் தக்கவளாய் தோன்றினாள்.சிரிக்கத் தான் தோன்றியது.மெல்ல சிரித்தேன்.லூசு மம்மி என்று உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

ஒன்றை முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன்.அம்மா எம்பிராய்டரியில்  கைதேர்ந்தவள்.அந்த கிரீச் பெட்டிக்குள் சட்டை ஒன்று இருந்தது. புதிதாய் பிறந்த சின்னஞ்ச்சிறு குழந்தை அணியக் கூடிய சட்டை.அதில் உத்தவ் என எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.ஊகிக்க எனக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை.ஆண்குழந்தை தான் பிறக்கும் பிறக்க வேண்டும் என ஆசையாய் இருந்திருக்கிறாள்.நான் பிறந்து விட்டேன்.ஏமாற்றம்.அதிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை.ரொம்ப சின்னப்புள்ளதனமால்ல பிஹேவ் பண்றா இந்த ஜானகி என்று சிரித்தது மனசு.

திருமணத்திற்கு போய்விட்டு வந்த அம்மா என்னைப் பாரத்த உடனேயே  என்ன இது கோலம் என்றாள்.சென்னையிலிருந்த போது பல்கலைக்கழக  விழாவொன்றில் ஜீன்சும் டீ சர்ட்டும் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படத்தை அம்மாவிடம் காட்டியபோது முத்தமிட்டு கெஞ்சும் குரலில் சொன்னாள் ‘அங்கே என்ன வேணா உன் இஷ்டப்படி போட்டுக்கோ செல்லம்   இங்கே ஏதாச்சும் ஏடாகூடம் பண்ணிடாத கோபிம்மா’.அத்தி பூத்தார் போன்று அபூர்வமாய் ஒலிக்கும் அம்மாவின் கண்டிப்பான குரல் நினைவை கலைத்தது ‘ஏய் உன்னைத்தாண்டீ கோபி இதென்ன கோலம்’.எந்த ஒரு அதிர்ச்சியும் முகத்தில் காட்டாமல் அவள் கண்கள் பார்த்து சொன்னேன் “நான் கோபி இல்ல அம்மா..உத்தவ்”.அம்மாவின் முகத்தில் ரிக்டர் ஸ்கேல் எட்டு புள்ளிகளை காட்டியது.சட்டென சுதாரித்துக் கொண்டாள்.எப்படி ஊகித்தாள் எனத் தெரியவில்லை.விறுவிறுவென அறையை திறந்தாள்.கிரீச் சப்தம் கேட்டது.மண்ணெண்ணெய் பாட்டலோடு பின்பக்கம் போனாள்.துணி எரியும் மணம் காற்றில் வந்தது.

‘அப்போ என்னை பிடிக்கல இல்ல’.எதுவும் பேசாது கடந்து செல்ல முயற்சித்தாள்.அவள் கைகளை பிடித்து பின்னுக்கு இழுத்தேன்.’ஆம்பளைன்னா அவ்வளவு உசத்தியா உனக்கு’ என் வாயிலிருந்து ஒலித்த குரலின் அடர்த்தி எனக்கே அதிகமாயிருந்தது.அழத்தொடங்குவாள் என்ற எனது நினைப்பை பொய்யாக்கிய அவளின் முகத்தில் ஒருவித நிம்மதி பரவத் தொடங்கியது,சாட்சிகளோடு பிடிபட்ட பல நாள் திருடனின் முகத்தில் பரவும் நிம்மதி.பேசஆரம்பித்தாள்.கிருஷ்ண ஜெயந்தி அன்று நான் பிறந்ததால் கிருஷ்ண கோபிகா என்று பெயர் வைக்கலாம் என சொல்லிய பெரியப்பா, இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஆண் குழந்தை ஒன்று பிறக்கப் போவதாகவும் அவனிற்கு உத்தவ் என பெயர் வைக்கலாம் என்றும் சொன்னதாகவும், அவர் சொல்லியது போன்றே அடுத்த இரண்டு வருடங்கழித்து கிருஷ்ண ஜெயந்தியன்று உத்தவ் பிறந்ததாகவும்,ஆனால் பிறந்த அன்றே அவன் இறந்துவிட்டதாகவும்,அந்த சட்டை உத்தவ் வயிற்றில் இருக்கும் போது தைத்தது என்றும்.எப்படி இவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கதை கோர்க்கிறாள் என ஆச்சர்யம் வந்தது.பொய்கள் பேசி பழக்கப்படாதவர்கள் பொய் பேசுவது எத்தனை கஷ்ட்டம் என்பது அம்மாவின் உடல் மொழியிலேயே தெரிந்தது.இது போன்றான ரகசிய தருணங்களின் முன் நிற்கும் போது நினைவுக்கு வருபவள் எப்போதும் போல இப்போதும் நினைவுக்கு வந்தாள்.

‘பொண்ணுக்கு உன்வயசு தான்.நீ எப்போடி கல்யாணச் சாப்பாடு போடப் போறே’ என்றபடி வரவேற்றாள் கூனி அத்தை.அத்தை என்று அவளை நான் சொல்வதால் வயதை குறைவாக நினைத்து விடாதீர்கள்.எங்கள் பாட்டிக்கு ஆறு வருஷம் அவள் இளமை.திருமணமே செய்து கொள்ளாதவள்.இந்த வயதிலும் அப்பளம் வடகம் மோர்மிளகாய் விற்று வாழ்க்கையை சுயமாய் நடத்தி வருபவள்.பெரிய சேமிப்பு அவளது வங்கிக் கணக்கில் இருப்பதாகவும் தனது மரணத்திற்குப் பிறகு அதை பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு போய்ச் சேரவேண்டும் என்று எழுதி வைத்திருப்பதாகவும் பேச்சு உண்டு.குடும்பத்தின் சகல கதைகளின் களஞ்சியம் அவள்.’சொல்லுடி..என்ன எங்கிட்ட தெரிஞ்சுக்கணும்னு வந்திருக்க..’. உத்தவ் பற்றி என்றேன். வெறும் வாயிலேயே அவல் மெல்பவளுக்கு அரிசியை கொடுத்தால் கேட்கவா வேண்டும்.காப்பி குடிக்கிறியா என்றாள்.அப்பளவாடையுடன் காப்பி பிரமாதமான சுவையுடன் இருந்தது.

‘உத்தவ் பொறந்த பலன கணிச்ச உன்னோட பெரியப்பன் உத்தவ் நம்ம வீட்ல வளர்ந்தா எல்லாத்துக்குமே ஆகாது,தொடர்ந்து துர்மரணங்க நடக்கும்,நம்ம தலைமுறை குழந்தைங்க எல்லோரும் நடுத்தெருவுக்கு வந்துடுவாங்கன்னு  சொன்னான்.அதனால பெரியவங்க எல்லாரும் முடிவு பண்ணி உத்தவ்வை எங்கேயோ போய் போட்டுட்டு வந்துட்டாங்க’ உண்மையை உடைத்தாள் அத்தை.உடன் பிறந்த தம்பி ஒருவன் எனக்கு இருக்கிறான் என்ற நினைப்பே என்னை பெரிதும் கிளர்ச்சியடைய வைத்தது.எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பேன்.ஏன் இப்போது கூட தெருவில் யாரோ ஒரு அக்காவும் தம்பியும் பேசிச் செல்வதை கடந்து செல்லும் போது மெல்லிய வெறுமை என்னுள் பரவிச் செல்வதையும், அவர்களிருவரையும் ஒருகணம் நின்று அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பதையும் என்னால் ஒருபோதும் தடுக்க முடிபதில்லையே. சிறுவயதில் பிரிந்த குழந்தையை பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தாரும் மீண்டும் கண்டடையும் செய்திகள் எத்தனை படித்திருக்கிறேன். மனம் ஏனோ இலகுவாயிருந்தது. முறுக்கு இருந்தா கொடேன் என்றேன் அத்தையிடம்.

அம்மாவை கட்டிக் கொண்டு முத்தமிட்டேன். அத்தை சொன்னாங்க அம்மா கவலைப்படாதே உத்தவ்வை நாம கண்டுபிடிச்சுடலாம். என்ன சொன்னா என்று கேட்டாள் பாட்டி. சொன்னேன். அம்மாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லிவைத்தாற்போல ஒரே சமயத்தில் பெருமூச்சு விட்டார்கள். ’கூனி பொய் சொல்றா கோபி.உத்தவ் இறந்துட்டான்’ என்றாள் பாட்டி. வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த அம்மாவின் விரல்களில்  ரத்தம் எட்டிப் பார்த்தது. சாவகாசமாய் ரத்தத்தை துடைத்தபடியே அம்மா சொன்னாள் ‘எம்புள்ள இறக்கல.கொன்னுட்டாங்க’. பாட்டி ஒரு நிமிடம் தலை குனிந்தபடி இருந்து பின்னர் எழுந்து போனாள். ’கோவில்ல ஒரு நடுகல் இருக்குமே அங்க தான் தம்பியை புதைச்சிருக்காங்க’  ‘யார் கொன்னது’  ‘உங்க பெரியப்பா. அப்பாவும் பாட்டியும் உடந்தை’  ‘அப்பா வரட்டும் கேக்றேன்’  ‘வேணாண்டா.. செத்துப் போயிடுவாரு’  ‘சாகட்டும்’

ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது அந்த கோவில்.நடுகல் முன்னால் உட்கார முயன்று தலை சுற்றியபடி கீழே விழுந்தேன்.எத்தனை மணி நேரம் அழுதேன் என்று தெரியவில்லை. உடல் குலுங்கி ஓய்ந்து மயங்கி பின்னர் தெளிந்து எனது சுவாசத்தை மிகத் துல்லியமாக உணர்ந்த போது என்னை சுற்றிலும் கும்மிருட்டு பரவியிருப்பதை உணரத் தொடங்கினேன்.ட்ரங்குப் பெட்டியின் கிரீச் ஒலியும் ஒனிடா பூதங்களின் சிரித்த முகமும் ஒரு சேர நினைவிற்கு வந்தன.   

24 comments:

 1. பெயர்க்காரண புராணம் குட்

  ReplyDelete
 2. நல்ல எழுத்து நடை..

  ReplyDelete
 3. நீ.............................ளமான அறிமுகம்

  ReplyDelete
 4. கோபி கலக்கல் நடையில கலங்க வைச்சுட்டீங்க...

  ReplyDelete
 5. நேர்த்தியான எழுத்து நடை. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. என்ன இது ? அறிமுகமே இப்படியா ? தமிழ் படைப்புலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? வாழ்த்துக்கள் கிருஷ்ண கோபிகா

  ReplyDelete
 7. அருமையான அறிமுகம் ,அழகான எழுத்து நடை ,சிறந்த பதிவு ,வாழ்த்துக்கள் .படித்து முடித்த பின்னும் 30 நிமிடங்கள் ஏனோ இந்த பதிவை பற்றியே சிந்தனை !மீண்டும் வாழ்த்துக்கள் .ஆனால் ஒரு உறுத்தல் நேற்று அநியாயமாக ஒருவரை வம்புக்கு இழுத்தது மட்டும் .

  ReplyDelete
 8. அருமையான நடைமுறை அருமையான அறிமுகம் வாழ்த்துக்கள் கோபி!!!

  ReplyDelete
 9. அசத்தலான நெகிழ்ச்சியான அறிமுகம்! இணையத்தில் கலக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான எழுத்து நடை தொடர்ந்து எழுதுங்கள். எதிர் பாராத திருப்பங்களுடன் நேர்த்தியான சம்பவங்களின் கோர்ப்பு சிறப்பு. எது உண்மை என வியக்க வைத்தது ?

  ReplyDelete
 11. நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. சொல்ல நினைத்த எண்ணங்களை வார்த்தைகளால் உருவம் கொடுக்க முடியவில்லை. தங்களின் எழுத்து நடை அருமை. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. பாராட்ட வார்த்தை பஞ்சத்தால் வாடுகிறேன் . தெளிந்த நீரோடை போன்ற எளிய நடை . நிழல் நிஜமாக இருந்தாலும் நிஜம் நிழலாக இருந்தாலும் உத்தவ் என் கற்பனை குதிரையின் கதா நாயகன் ஆகிவிட்டான் . தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

  ReplyDelete
 14. sema sema!!! Azhagu:-) elimai... Inimai:-).. Keep it up....! \m/

  ReplyDelete
 15. கடந்த 31ம்தேதி பரிசல் ட்வீட்டரில் லின்க் குடுத்தப்பவே ஒரு முறை படிச்சேன். இன்று மறுபடியும் .... இன்னும் பல முறை படிப்பேன்போல ... மனசுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பா இருக்கே !

  ReplyDelete
 16. இத்துனை மெலிய சோகம் இடையோடிய உங்கள் எழுத்துக்கள் ஆயிரம் கிளைக்கதைகள் சொல்கிறது...... இது உண்மைக்கதையாய் இருப்பின் பாராட்டதுதல் நன்றன்று # தொடருங்கள் # லாரிக்காரன்

  ReplyDelete
 17. ஒரு வரி விடாமல் படிக்கத் தூண்டிய எழுத்து, பல இடங்களை மறுபடியும் படிக்க வைத்த ஈர்ப்பு... அருமை! :-)உண்மையோ பொய்யோ அல்லது இரண்டும் கலந்ததோ தெரியவில்லை. ஆணால் உண்மையாக இருப்பின் உங்கள் தாயாரின் மன உறுதி வியக்கத் தக்கது.

  amas32

  ReplyDelete
 18. யப்பா.. எழுத்து நடைய சொல்றதா, கதை போக்க சொல்றதான்னு தெரில.. genius works are inspired by strong emotional presence.. அது தெளிவா தெரியுது.. கதை சொல்லுதல்ல முக்கியமான கட்டம் எது சொல்ல தேவையில்லன்னு ஒதுக்குதல்.. அந்த கட்டுப்பாடு தெளிவா தெரிஞ்சுது.. I dont reckon that I follow you.. +1d now.. கதை உண்மையா இருக்க கூடாதுன்னு ஆசைப்படுறேன்.. சொல்லாதீங்க.. அப்படியே விட்ருங்க..

  ReplyDelete
 19. எழுத்து நடைக்காக ரசித்து படித்தேன்.

  ஆமாம் நீங்க சிஈஜி 88 -9 2 பேச்சா? நண்பர் திருப்பூர் முரளிக்ரிஷ்ணன் இப்போ மைக்ரோசாப்டில் இருப்பவர் தெரியுமா?

  ReplyDelete
 20. மிக நன்ராக இருக்கிறது.

  ReplyDelete
 21. நல்ல, சிறப்பான நடை. தொடர்ந்து எழுதுங்கள். இன்னமும் சில நுணுக்கங்கள் மிகச் சுலபமாய் உங்களுக்கு வரும். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. துக்கம் என்ற சிறு சொல் எவ்வளவு எடைகூடியது, அது கரைக்கமுடியாத ஒரு பாறையை போல அல்லவா பறிகொடுத்தவரின் மனதில் ஏறி நிற்கிறது, ஆனாலும் அந்தப் பாறை காலஒட்டத்தில் உப்பாக இளகி கரைந்து போய்விடுகிறது, எந்த துக்கமும் மனித வாழ்க்கை முற்றாக முடக்கிவிடுவதில்லை என்ற எஸ்.ராவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

  அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள்.

  ReplyDelete

வாங்க பேசலாம்..