19 May 2012

முருகபூபதியின் சூர்ப்பணங்கு நாடகம்..




நான் சென்னை சென்று கொண்டிருக்கும் போது திருச்சியில் மதியம் சந்தித்த நண்பர் இழுத்துப் பிடித்து என்னை தஞ்சைக்கு அழைத்துப் போனார்; முருகபூபதியின் சூர்ப்பணங்குநாடகத்திற்கு. இத்தன வருஷம் பழகியிருக்கான் மொத மொறயா ஒரு இடத்துக்கு கூப்பிடுறான்ங்ற ஒன்றிற்காகவே, அவனது நட்பின் பொருட்டு மட்டுமே, வேண்டா வெறுப்பாய் போய்த் தொலைந்தேன்.பின்னர் நிஜமாகவே தொலைந்தேன்.



பூபதியின் இசை தான் ஹைலைட். ஒருகட்டத்தில் நான் ஒரு யட்சியைப் போல மரத்தில் சாய்ந்து கொண்டு உடலைப் பற்றிய தன்னுணர்வின்றி ரசித்துக் கொண்டிருந்ததாக நண்பன் கூறினான். பூபதியின் குரலை என்னால் இன்னமும் காதுகளில் கேட்க முடிகிறது. நிராதரவற்றுப் போய் கைவிடப்பட்ட அபலைப் பெண்களின் குரல் அது. அமைதிக்கும் வன்முறைக்குமிடையேயான பொதுப் புள்ளியில் கனன்று உக்கிரத்தை அல்லது உத்திரத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் தீயின் வலி அது. நண்பர் நாடகம் முடிந்த பின்னர் சிறிது நேரம் பூபதியிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது நினைக்கும் போது சில வார்த்தைகள் நானும் பேசியிருக்கலாம் என தோன்றுகிறது. மறக்க இயலா நினைவாயிருந்திருக்கும்.

நான் வாசிக்க முயன்று தோல்வியடைந்த கோணங்கியும் அங்கு வந்திருந்தார்.அவர் என்னை கடந்து செல்லும் போது எழுந்து வணக்கம் சொன்னேன்.அவரும் பதில் வணக்கம் சொன்னார்.எப்படியிருக்கீங்க என்று தெரிந்தவரிடம் கேட்பது போன்று அவர் கேட்ட போது நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.அவரை நான் பார்ப்பது அதுவே முதல் முறை.



நண்பர் ஞானப்ரகாசம் ஸ்தபதி சென்னையில் நாடகம் நிகழவிருக்கும் தகவலை பகிர்ந்து கொண்ட போது மிகவும் மகிழ்வடைந்தேன். முன்னர் சென்னையில் உடன் வேலை பார்த்த தோழிக்கு கல்யாணம் என அம்மாவிடம் சொல்லிவிட்டு நிச்சயம் சென்னை வந்து விடலாம் என்பது எண்ணமாயிருந்தது. ஒவ்வொரு முறையும் பொய்களை ஒத்திகைகள் பல பார்த்த பின்னரே அம்மாவிடம் சொல்லத் துணிவேன்.ஆனால் ஏனோ அவளைப் பார்த்த உடனேயே உண்மை தானாகவே வெளியே வந்து விடும்.இப்படி சொல்லணும்னு நினைச்சேன்மா என்பதையும் அப்போது சேர்த்து சொல்வதே எனது வழக்கம்.போறதுன்னா போ.. ஆனா அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்றாள் அம்மா. சரி என்றேன். இன்னொரு கண்டிஷன்.புதன் கிழமை உனக்கு நிச்சயதார்த்தம். ஒன்றும் பேசாது சென்று விட்டேன். கிணற்றடிக்கு தம் மக்களை அவசர அவசரமாக இழுத்துச் செல்லும் நவீன தங்காள்கள் நமது அம்மாக்கள் எனத் தோன்றியது. போற தான என்று அம்மா பின்னர் கேட்ட போது சென்னையில் இந்த வாரம் முழுதும் மழ பெய்யுமாம் நாடகம் கேன்சல்என்றேன். எப்போ தள்ளி வச்சுருக்காங்களாம் என்றாள். சிரபுஞ்சி மாதிரி இனி ஒவ்வொரு நாளுமே சென்னையில மழ பெய்யுமாம் அதனால இனி நாடகமே அங்க கிடையாதாம்  ‘வேறேதாவது ஊர்ல வைக்கலாம்லா பூபதி ஆக்சிடன்ட்டுல செத்துட்டாராம் அதானால அந்த ட்ரூப்பையே கலச்சுட்டாங்களாம்  ‘உன் வயசு பேச சொல்லுது சம்பாதிக்க வேற செய்யுறஎன்றபடி நகர்ந்தாள் நல்லதங்காள். தனியே வாழ வழியேது.. தனித்தன்மைக்கு விடை கொடுக்க என் வழி பற்றி வாயம்மாஎன்றே கிணற்றடிக்கு அழைக்கின்றனர் ஒவ்வொரு வீடுகளிலும். வாழ்வின் ருசிக்கு ஏங்கும் எங்கள் நாவுகள் குறித்து யார்க்கும் கவனமில்லை.



சென்னையில் இருந்த போது எஸ்வி சேகரின் நாடகம் ஒன்றிற்கு சென்றிருக்கிறேன். கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் மொக்கை கொஞ்சம் காபி என நன்றாகவே இருந்த அது அடுத்தடுத்த நாட்களிலேயே நினைவின் சிடுக்குகளில் தொலைந்து போயிற்று. ஆனால் பேரணங்கு பார்த்து நிச்சயம் இரண்டு மாதங்களாவது கடந்திருக்கும்.இன்னமும் அது குறித்து நினைக்கும் போது உருவாகும் வெம்மையும் ஆற்றாமையும் வரும் பெருமூச்சும் ஆங்காரமும் நாடகத்தின் வன்மையை எனக்கு உணர்த்துவதாய் உள்ளது.அப்போது நான் எனது வலைப்பூ  முயற்சியையே ஆரம்பித்திருக்க வில்லை. பார்த்த கையோடு பகிர்ந்திருப்பின் நிறைவாய் முழுமையாய் இருந்திருக்கும்.


நாடகம் பேசுவது நல்லதங்காளின் கதையை. நாமறிந்த நல்லதங்காள் ஒருவர் தான். ஆனால் தங்காள்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர்; அவள் தம் ஏழு குழந்தைகளும் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர் என்பதை ஈழம் தவிர்த்த பற்பல வலிமிகு சமகால வரலாற்றையும் முன்வைத்து மனம் கணக்க உங்கள் மன சாட்சியோடு உரையாடியபடியே சொல்லிச் செல்கின்றது. தனது வலி குழந்தைகளுக்கு வேண்டாம் என்ற பெருங் கருணையோடு, குழந்தைகள் அனைவருடன் தற்கொலை செய்து கொள்ள விரும்பும் அன்னைக்கும், வாழ்வின் மீது தீரா காதல் கொண்டிருக்கும்/அவ நம்பிக்கையூடே சிறு பொறி நம்பிக்கையையும் கொண்டிருக்கும் மகள்களுடனுமான போராட்டம் எதன் காரணிகளால் முடிவற்று நீடிக்கின்றது என்பதை சமரசமின்றி செவுட்டில் அறைந்தார் போல சொல்கிறது நாடகம்.



சுரைகளை பிரசவிக்கும் படிமத்தில் இயக்குனர் சொல்ல வருவது எமக்கு உவப்பானதாக  இல்லை.பிரசவிப்பதையே நிறுத்தினாலும் கூடும், எங்கள் கருவறை நிச்சயம் சுரைகளை ஜனனிக்காது. சுரைகளுக்குப் பதிலாக தனிப்பட்ட கொலைகளை புறக்கணிப்புகளை பழிவாங்கல்களை பாசாங்குகளை துரோகங்களை அவ்வப்போது எம்மை சுற்றியுள்ளோருக்கு கருணையின்றி சாத்தியப்படும் பொழுதெல்லாம் வாரி வழங்கியபடியே இருக்கின்றோம் தான் நாங்கள்!! சுரை படிமம், புனித நூல்கள் கூறும் நரக கோட்பாட்டினைப் போன்றே பயங்காட்டி, தனது பார்வையாளனை நல்வழிபடுத்த இறைத்தூதர் முருகபூபதி பயன்படுத்துவதாகவும் நாம்  கருதிக் கொள்ளலாம். 



முருக பூபதிக்கு நெருங்கிய நண்பர்கள் யாரேனும் இந்த பதிவை காண நேர்ந்தால் பூபதியிடம் இரு விசயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் என தெரிவியுங்கள். 1.நாடகம் முடிவுற்ற பிறகு நிகழும் உரைகளை தவிர்ப்பது நல்லது. அது பொங்கும் மனதை கனிய வைத்து ஆசுவாசப் படுத்தி விடுகிறது.மேலும் காண்பவர் நாடகம் குறித்து பலப் பல எண்ண ஓட்டங்களோடு இருக்கும் பொழுது அளிக்கப்படும் கோனார் உரைகள் தனியரின் சிந்தனை ஓட்டத்திற்கு தடையாகவும் அமைந்து விடுகிறது 2.நாடகம் நிறைவுற்ற பிறகு நடிகர்களை அவர்களது ஒப்பனைகளை களைந்து பார்வையாளர்களுடன் உரையாட அனுமதிக்கக் கூடாது.அது பார்வையாளரின் போதையை தெளிய வைத்து விடும் வல்லமை கொண்டது. இவ்விரண்டையும் தவிர்க்க வேண்டுமெனின் விமர்சன நிகழ்வொன்றை தனியாக மறுநாளில் ஏற்ப்பாடு செய்தால் மட்டுமே சாத்தியப் படும்.தமிழ்ச் சூழலில் கனவுகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.ஆகவே நண்பர்களே! எனது அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்: நாடகத்திற்கு நீங்கள் செல்வீர்களானால் நாடகம் நிறைவுற்ற பின்னர் அடுத்த வினாடியே விறுவிறுவென இடத்தை காலி செய்து வந்து விடுங்கள்.யாரிடமும் பேசவோ,யார் பேச்சைக் கேட்கவோ வேண்டாம். நிரம்பித் தழும்பும் கோப்பையிலிருந்து வீழும் சொட்டுக்களின் ஓசை பெரும் தியான அனுபவம்! 


அரங்கின் ஒளியமைவும் நடிகர்களின் நிகரற்ற வெளிப்பாடும் உங்கள் கற்பனைக்கு எட்டாததாய் இருக்கும் என உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.


நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதிருந்தால் பாவிகள் என்றும், பிற பகுதிகளிலிருந்து இதற்கென பயணித்து வந்து காண்பீர்களாயின் பாக்கியவான்கள் என்றும் அழைக்கப்படுவீர்களாக!! 


ஆமென்.

2 comments:

  1. அருமையான கருத்துரை.
    நீங்கள் எழுதியதாலேயே நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் மேலோங்குகிறது
    ----------------------------------
    நந்தினி மருதம்
    நியூயாரக் 2012-07-02

    ReplyDelete
  2. கோணங்கியிடம் எதனால் ஏமாற்றம்..... எனக்கு புரியலெ....

    ReplyDelete

வாங்க பேசலாம்..