Kicking Sun என்றாள் சனிதா வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய். ஹாஸ்டலில் இருந்திருந்தால் இந்நேரம் என்ன சொல்லியிருப்பாள்
என ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து நல்ல பிள்ளையாய் சிரிப்பை அடக்கிக் கொண்டேன். திருவனந்தபுரத்திலிருந்து
வந்தவள் திடீரென தனது திருமண அழைப்பிதழை நீட்டிய போது கொஞ்சம் அதிர்ந்து தான்
போனேன். ஏன் அதுக்குள்ள என்று என்னை அறியாமலேயே கேட்டு விட்டு பின்னர்
நாக்கை கடித்துக் கொண்டேன். கண்களை விரித்து உதட்டை அழுந்தி பரிதாபமாக சிரிக்க முயன்று
தோல்வியடைந்தேன். பல்கலை முதலாம் ஆண்டில் my fav personality என்ற தலைப்பில் இந்திரா
நூயியைப் பற்றி அவள் அரை மணி நேரம் உணர்ச்சிவசப்பட்டு பேசியது நினைவுக்கு வந்தது. திருமண
அழைப்பிதழில் மணமக்களின் படிப்பை போடாதிருந்தால் மணமகளை விட மணமகன் குறைவாக
படித்திருக்கிறார் என்று அர்த்தம். அவளது முகத்தை பார்க்காமலேயே அழைப்பிதழைப்
புரட்டியபடி என்ன செய்றாங்க வுட்பி என்று
கேட்டேன். ப்ளஸ் டூ பெயிலாம்,ஆனா ரியல் எஸ்டேட்டுல பணம் கொட்டுதாம்,நல்ல
குடும்பமாம்,ஜாதகமும் ஒத்துப் போச்சாம்.. பேரண்ட்ஸ் சொல்றாங்க.. என்ன பண்ண சொல்ற..
என்று முழுங்கினாள் சனிதா. வாழ்க்கை நாம நினைக்கிறபடியெல்லாம் அமையறதில்ல கோபி.. அமையுற
வாழ்கைய சந்தோஷமா ஏத்துக்கணும்னு தத்துவம் வேற. அவர் அஞ்சு மொழில சரளமா பேசுவார்
தெரியுமா என்று உற்சாகமாக சொன்னாள். நிஜம்மாவாடி என்று நானும் உற்ச்சாகத்தை
வரவழைத்துக் கொண்டு கேட்டேன். உள்ளூர இருவருக்குமே எரிந்து தான் கொண்டிருந்தது. சிப்ஸும்
போளியும் சிவப்பு பழமும் வாங்கி வந்திருந்தாள். கூடவே நான் கேட்டுக் கொண்டபடி Dam
999 திரைப்பட சிடியும். உருமியை மறந்து விட்டாளாம். வேணும்னே மறந்திருப்பாள்
என்றது மனது. ‘எங்களுக்கெல்லாம் உங்க ஊர் சூர்யாவை தான் பிடிக்குது உனக்கு எங்க
ஊரு ப்ரித்விராஐை..’ என்று ஒரு முறை அவள் சொன்னதும், பொட்டிரெட்டிப்பட்டி ECE ப்ரித்விராஜுடன்
என்னை இணைத்து தோழிகள் கடைசி வரை ஒட்டிக் கொண்டிருந்ததும் ஞாபகத்திற்கு வந்தது.
சற்று முன் தான் டேம் 999 பார்த்து முடித்தேன்.சினிமா
குறித்த வாசிப்போ பார்வையோ எனக்கேதும் கிடையாது என்பதை முதலிலேயே சொல்லி
விடுகிறேன். சந்திக்க நேரிடும் குரல்களில் ஒன்று என்ற அளவிலேயே நீங்கள் எடுத்துக்
கொள்ள வேண்டும். டேம் 999 தலையில் தூக்கி
வைத்து கொண்டாடக் கூடிய அளவிற்கு இல்லையென்றாலும் நிச்சயம் பாராட்டப் பட
வேண்டிய ஒன்று தான்.எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் பெரிதாக கவர வில்லை என்றாலும்
ஒட்டுமொத்த அளவில் படம் சிறப்பாகத் தான் இருந்தது- செஞ்சூரிகள் ஏதும் இல்லாது இருபது
முப்பது என ஒவ்வொருவரும் எடுத்து வெற்றியும் பெரும் நியுசிலாந்து அணி போல. கதை
ஏற்கனவே நீங்கள் அறிந்த ஒன்று தான். முல்லைப் பெரியாறு தவிர்த்து இன்னொரு விஷயமும்
பார்ட் டைம் பகுத்தறிவாளர்களுக்கு பிடிக்காது போகலாம்.ஜோதிடத்திற்கு படம்
அளிக்கும் முக்கியத்துவம். தற்செயல் நிகழ்வென்று சொல்ல முடியாதபடி முன்கூட்டியே
அனைத்தையும் கணித்துக் கொண்டிருக்கிறது படத்தின் ஒரு கதாபாத்திரம்.திலகன் அதை
செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இயக்குனர் நினைத்திருந்தால் மிக எளிதாக
சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.பழைய அணையை உடையாதிருக்கச் செய்து விட்டு,துரை கட்டும் புதிய அணையாலேயே அழிவு நிகழ்வதாக காட்டி,காதலர்களை
இறுதிக் காட்சியில் காட்டுவது போன்றே உயிரோடு விட்டு விட்டாலே போதுமானது.அவர்கள்
மீண்டும் சந்திக்கவும்,(சந்திப்பின் விளைவாக) பழைய அணை உடைவதற்கான சாத்தியக் கூறு
இருப்பதாகவும் பார்வையாளன் ஒரு புதிய கதையை தனக்குள் நிகழ்த்திக் கொள்வான்.இயக்குனர்
இதனை யோசிக்க வில்லையா இல்லை பழைய அணை உடைவது போல காட்டியே ஆக வேண்டும் என்பது
தயாரிப்புக்கு உதவியவர்களின் நிலைப்பாடா என்பது தெரியவில்லை.யோசித்திருக்க
மாட்டார் என்றே தோன்றுகிறது.
மீராவாக வரும் விமலா ராமன் அடிபொலிகிறாள்.படத்தில்
முழுமையான நடிப்பை வழங்கியது அவள் ஒருத்தியே.சகல உணர்வுகளையும் அருமையாக
வெளிப்படுத்துகிறாள்.கோவிலில் வினய்யின் அருகில் நின்று கொண்டு சாமி கும்பிடும்
காட்சி ஒன்றே போதும்;வினய்யின் மீது கொண்டிருக்கும் உடல் ஈர்ப்பை நொடிப் பொழுதில் அவள் கண் செல்லும் திசையால்
அதனைத் தொடரும் சிறு சலன அசைவால்.. வெகு
அருமை.மீரா தனது தோழி ரஸியாவிடம் சட்டையை எடுத்துக் காட்டி முகரும் காட்சியெல்லாம்
ரொம்ப ஓவர். சர்வேதேச படத்தில் மசாலாக்களை தவிர்த்திருக்கலாம். இன்னொரு விசயமும்
மீராவின் பாத்திரப் படைப்பில் உறுத்துகிறது.வினய் திருமணமாகி மனைவி குழந்தைகளோடு
இருக்க மீராவை மட்டும் கன்னியாகவே இருக்குமாறு நிகழ்வுகளை அமைக்க இயக்குனருக்கு
என்ன நிர்பந்தம்? ஆண் எவளோடு வேண்டுமானாலும் படுப்பான்,மணம் செய்வான்,குழந்தைகள்
பெற்றுக் கொள்வான்,பெண் அவனையே நினைத்துக் கொண்டு அருள் நிறைந்த மரியாயே ஜெபம் சொல்லிக் கொண்டு கற்புக்கரசி
கண்ணகியாக காத்திருக்க வேண்டும்,பிறகு அவனுக்கு குற்றம் நடந்தது என்ன என்று
புரிந்தவுடன் மீண்டும் காதல் பூக்க வேண்டும்.போங்கப்பா... நீங்களும் உங்கள்
பெண்ணுடல் மீதான பொசஸிவ்னெஸ்ஸும்.மீராவுக்கும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட
வெளிநாட்டுக் காரனுக்கும் ஒரு கசமுசா நடந்தது போல காட்டினால் குறைந்தா போய்
விடுவீர்கள்?
சங்கரனாக ராஜித் கபூர்,வினய்யாக வினி
ராய்,கேப்டன் பிரெட்ரிக் ப்ரவுனாக ஜோஷுவா,ராசியாவாக மேகா பர்மன்,மரியாவாக சாலா
உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்களிப்பை தங்களளவில் அளித்திருக்கிறார்கள்.வில்லன் பல
தமிழ் படங்களில் பார்த்த முகம் தான்.ஆசிஸ் வித்யார்த்தி வலிமை
சேர்க்கிறார்.சாண்ட்ராவாக வரும் லிண்டா ஒரு செய்தி தொகுப்பாளினிக்கு உரிய பக்குவத்தை
வெளிப்படுத்த தவறி விடுகிறார் எனத் தோன்றுகிறது.லிண்டாவை என்டிடிவி பர்கா தத்தின் நிகழ்ச்சிகளை
கொஞ்சம் பார்க்கச் செய்திருக்கலாம்.ஆனால் முதன் முதலாக அணை உடையும் அபாயம் தெரியும்
போது அவள் திடுக்கிடுவது மிகுந்த நேர்த்தியாக இருக்கின்றது.
படம் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்பதே
தெரியாத வண்ணம் ஒரு எடிட்டிங். சுரேஷ் பாய் பாராட்டுக்குரியவர்.ஒலிப்பதிவு யாரெனத்
தெரியவில்லை.திருட்டு சிடியில் பார்க்கும் போதே பல இடங்களில் ஸ்கோர்
செய்கிறார்.முஜே சோடுகே பாடலில் கன்னத்தில் அறையும் ஒலி அத்துனை செல்லமாகவும்
பிரியமாகவும் ஒலிக்கிறது. தியேட்டரில் பார்த்தால் மிரட்டுவார் எனத்
தோன்றுகிறது.ஒளிப்பதிவு அடடே எனச் சொல்லும் படியாக ஒரு காட்சியிலும் இல்லாதிருப்பதை
குறையாக கருதுபவர்கள் குறையாகவும் நிறையாக
கருதுபவர்கள் நிறையாகவும் கொள்ள முடியும்.
தோட்டா தரணி குறித்து ஊடகங்களில் சகட்டு
மேனிக்கு பாராட்டித் தள்ளியிருந்தார்கள்.புதிய அணை கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும்
தருணத்தில் காட்டப்படும் காட்சிகளின் அரங்க அமைவுகள் பழங்கால ப்ளாக் அண்ட் வொயிட்
திரைப்பட காட்சிகளை நினைவு கூற உதவுகிறது.அணை உடையப் போகிறதென அறிந்து மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது போன்று அமையும் காட்சிகளில் போடப்பட்டிருக்கும்
செட்டிங்க்ஸ்கள் குப்பையிலும் குப்பை.நமது பவர் ஸ்டாரின் படங்களில் கூட அதை விட
நூறு மடங்கு சிறப்பான அரங்க அமைவுகளை நிச்சயம் காணலாம்.சர்வதேச தரம் வேண்டாம், இந்தியத்
தரமாவது வருமாறு பார்த்திருக்கலாம்.பேரழிவுக் காட்சிகளில் மனிதர்களை அவர்கள் தம் வீதிகள்
வீடுகளோடு காட்டும் காட்சிகள் மிகுந்த அந்நியமாக பார்வையாளரை உணர வைக்கின்றன. மற்றபடி
தோட்டா தரணியை பாராட்டுவதற்கு படம் நெடுக காட்சிகள் விரவிக் கிடக்கின்றன.
இசையமைப்பாளர் ஒசுப்பச்சன் என டைட்டில் கார்ட்
சொல்கிறது.தமிழ் சினிமாக்களில் அவர் ஏதும் இசையமைத்ததில்லை என்பதனால் நீங்களும்
அவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.எந்தவொரு
இந்திய பின்னணி இசையும் மேற்கத்திய காதுகளுக்கு ஆச்சர்யத்தையே அளிக்கும்.ஆகவே
இசைக் கோர்ப்புக்கென ஆஸ்காரில் அவர் வரிசைப்படுத்தப் பட்டமை புரிந்து கொள்ளக்
கூடியதே. இந்திய மனங்கள் படத்தின் பின்னணி இசை குறித்து பெரிதாக சிலாகிக்காது
என்பது எனது எண்ணம். ஹாலிவுட் படங்களுக்கு இளையராஜா பங்களித்தால் ஒவ்வொரு வருடமும்
கேன்ஸிற்கு போகும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இசைய ராஜா லாஸ் ஏஞ்சல்ஸ் போக
வேண்டியிருக்கும். தீம் சாங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அருமையான ஒன்று. என்ன
செய்வது,நான் தான் கமிட்டியில் இல்லையே? மொத்தத்தில் எந்தவொரு இசையமைப்பாளரும்
இந்தப் படத்திற்கு இதை விட அதிகமாக பங்களித்திருக்க இயலாது.
இயக்குனர் சோஹன் ராய். பல இடங்களில் தனது
முத்திரையை பதிக்கிறார்.நில நடுக்கம் உணரும் பசுக்களின் முகத்தில் தெரியும்
மிரட்சி,அணை எதிர்ப்பாளருக்கு துரை சாராயம் ஊற்றிக் கொடுக்க எதிர்ப்பாளர் தன்னை
இழுத்து வந்தவர்களை நோக்கி பெருமிதத்துடன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து
குடிக்கும் காட்சி,சிறு மழையில் நனைந்த சான்ட்ராவிற்கு ஜலதோஷம் பிடித்துவிடக்
கூடாதென சாரங்கன் அவளது உச்சந்தலையில் வைக்கப் போக சான்ட்ராவோ கையை நீட்டும்
காட்சி,துரையின் கட்சிக்கு கிழக்கிந்திய ஜனநாயக கட்சி என பெயரிட்டிருப்பது என்று பலவற்றை
சொல்லிக் கொண்டே போகலாம்.சான்ட்ரா முதலில் தனியாகவும் பின்னர் குழுவுடனும் மரியாவை
மீட்கப் போகும் காட்சிகள் கார்ட்டூன் பார்க்கும் உணர்வையே தருகின்றன.இரு ஆண்கள் அருகில்
இருந்தும் மீட்கும் முயற்சியை ஒரு பெண்ணே முன்னின்று எடுப்பது மகிழ்வாகத்
தானிருக்கிறது.”ஒரு கடலாடியை மிரட்டுவதற்கு இது போதுமானதில்லை” என வருகிறது ஒரு
வசனம்.தென்தமிழக நிகழ்வுகள் மனதில் சட்டென வந்து போயின.எத்தனை சத்தியமான
வார்த்தைகள்.இயேசு பிரான் காரணமில்லாமலா
பன்னிருவரையும் அவர்களிலிருந்து தேர்ந்தெடுத்தான்.அச்சனுடன் ஆற்றைக்
கடக்காத மீரா எப்படி தப்பித்தாள் என்பதை திரையில் காட்டாது ஊகத்திற்கு
விட்டிருப்பது பாராட்டுக்குரியது.எப்படி அவள் தப்பிக்க இயலும் என்ற கேள்வி இங்கு
அர்த்தமற்றது.தப்பிக்க விதிக்கப்பட்டிருப்பதால் தப்பித்தாள் என நான் சொன்னால் என்
மீது ஆரியமுத்திரைகள் விழும் அபாயமிருக்கிறது.மீராவிடமிருந்து சிறுவன் சாம்
விடைபெற்றுக் கொள்ளும் போது அவளுக்கு கொடுக்கும் பரிசுப் பொருளில் ஒரு உண்மை
இருக்கிறது;அந்த பரிசுப் பொருள் இறுதியில் என்னவாகிறது எனக் காட்டும் காட்சியில்
ஒரு தரிசனமிருக்கிறது.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் முடிந்த பின்னர் ஒரு
வரி போடுவார்கள்.ஏறக்குறைய அதே அர்த்தத்தில் இவர்களும் ஒரு நான்கு வரி
சொல்கிறார்கள்.பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே யமுனாவும் இதையே பாபுவிடம் சொல்லி
சென்று விட்டாள்.மகாவாக்கியங்களை புரிய வைக்க படைப்பாளிகள் யுகம் யுகமாய் தொடர்ந்து
மெனக்கெட்டு கொண்டே வருகிறார்கள்.பரிதாபமாயிருக்கிறது.
வொர்த் வாட்சிங்!!
(தொடரும்..)
கோபிகாவின் விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனாலும் இப்படத்தின் CD ஒன்றை வாங்குவேன் என்று நினைக்கவில்லை. "DAM 999 மற்றும் ஜோதிடம் பகுத்தறிவுவாதிகளுக்கு பிடிக்காது!" சரிதான். நாத்திகம் பேசுற கருணாநிதிக்கு Da Vinci Code ம் பிடிக்காது. கருணாநிதிக்கு மற்றவர்களை விட பகுத்தறிவு ஜாஸ்தி.
ReplyDeleteதெளிந்த சிந்தனை
ReplyDeleteநீரின் கண்ணாடித் தன்மையோடு
அழகுற பிரதிபலிக்கிறது
கோபிகா.....உனது சொற்களை வாசிக்கும்பொழுதே
திரை விரிந்து காட்சிகள் தங்களை
ஆம் ஆமென ஒப்புவிக்கத் துவங்கிவிடுகின்றன
வசீகரிக்கும் மந்திர நடை
எழுதிச் சாதிக்க உகந்தவள் நீ
வாழ்த்துகள்
டாம் 999 நாவலில் முதற் பக்கத்திலேயே முல்லை பெரியாரை குறிப்பிட்ட தைரியம், படத்தை பற்றி பேசும்போது மட்டும், இது சீனாவில் ( Banqiao dam disaster ) நடந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டது என்று "compromise" ஆகிறார் சோகன் ராய். உள்நோக்கம் எதுவாக இருந்தாலும், கருத்து சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அந்த படம் தடை செய்ய பட்டிருக்க கூடாது.
ReplyDeleteஒரு சினிமாவுக்கு இந்தமாதிரியும் விமர்சனம் கொடுக்கலாமா?!!!!! :) அடிப்பொலி... முதல்ல மெதுவா இரு தோழிகளிக்கு இடையேயான உரையாடல் கிசுகிசுவா ஆரம்பிச்சி (பிரித்வி சார்வாழ்க!:P) அப்புறம் சினிமாக்கு விமர்சனம் ... தமிழ்நாட்டுல தடைபண்ணதாலோ என்னவோ படத்தோட கதை எனக்குதெரில..இப்போதான் தெரியும் ... இடையே எட்டிப்பார்க்கும் பெண்ணியகுரல் epic ... sply tat "அருள்நிறைந்தமரியே" :)டைரக்டர் இதை வேற மாதிரிசொல்லியிருந்தா கல்லா கட்டமுடியாதே கோபிகா? அப்புறம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நல்லா நோட்பண்ணிருக்கீங்க .. எப்பவும சொல்ற அதே டயலாக் "சூப்பர்நடை" :) கடைசில வரும் .<"ஒரு கடலாடியை மிரட்டுவதற்கு,இயேசு, தென்தமிழக நிகழ்வுகள்"> மட்டும் என்னோட சிற்றறிவுக்கு எட்டல :) keep it going :) waiting for your next post
ReplyDeleteஒரு படத்துக்கான விமர்சனம் இப்படியும் இருக்கலாம் என காடியதற்கு நன்றி.. வித்தியாசமான ஓப்பனிங்க்..
ReplyDelete>>மீராவாக வரும் விமலா ராமன் அடிபொலிகிறாள்.படத்தில் முழுமையான நடிப்பை வழங்கியது அவள் ஒருத்தியே
அவர் இவர் என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
விரிவான நிறைவான விமர்சனம்! வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://www.marinebiztv.com/uploader/play.php?get=20121008065907
ReplyDeleteYou know High court lifted the Ban on DAM 999 film in Tamil Nadu. Above link is DAM 999 Tamil song. Please watch and comment.
//ல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே யமுனாவும் இதையே பாபுவிடம் சொல்லி சென்று விட்டாள்//
ReplyDelete:):)